தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த 15 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்த மழை நீர் பாதிப்பு முடிவதற்குள் அடுத்தடுத்து கடந்த 2 நாட்களாக மீண்டும் கன மழை பெய்தது. இதில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் மீண்டும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மழை வெள்ளம் பாதித்த தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மழை நீரை வடிய வைக்க துரித நடவடிக்கை மேற்கொண்டார்.
இதே போல் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவடி, பூந்தமல்லி, திருமுல்லைவாயல் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.
தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

முடிச்சூர் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அங்குள்ள அமுதம் நகரில் மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து தாம்பரம், இரும்புலியூர் பகுதிக்கு சென்றார். அங்கு வானியன் குளம் பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது அதிகாரிகளிடம் இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிடனுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ். ஆர்.ராஜா எம்.எல்ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

