
நடிகர் ராதாரவி, டப்பிங் சங்கத்தில் பல கோடி முறைகேடு செய்திருப்பது விசாரணையில் அம்பலம்!
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் உத்திரவு ந.க.எண்.ஆ3/5281/2019 தேதி 10.01.2022
நடிகர் ராதாரவி டப்பிங் சங்கத்தில் பல விதங்களில் ஊழல் செய்திருப்பதாக அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில்,
டப்பிங் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான மயிலை S குமார், சிஜிமோல்,
V காளிதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகத்திற்கு எதிராக ஒரு வழக்கை தொடர்ந்தனர்.
2019 ல் தொடர்ந்த அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி S M சுப்பிரமணியம் அவர்கள்,
நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகம் டப்பிங் சங்கத்தில் செய்திருப்பதாக சாட்டப்பட்டிருக்கும் ஊழல் புகார்கள்
அனைத்தையும் தீர விசாரிக்கும் படி The Additional Registrar of Trade Unions – No. 1 cum Deputy Commissioner Labor No. 1 க்கு ஓர் உத்திரவை பிறப்பித்தார்.
அந்த உத்திரவு படி, டப்பிங் சங்கத்தில் நிலம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா, முறையான ஆவணங்கள் இருக்கிறதா,
பத்திர பதிவு ஆவணங்கள், டப்பிங் சங்க வரவு செலவு கணக்கு என அனைத்தையும் தீவிரமாக விசாரணை
செய்த தொழிலாளர் இணை ஆணையர் இறுதியாக தன் விசாரணை அறிக்கையை வெளியிட்டார்.
47 பக்கங்கள் கொண்ட அந்த விசாரணை அறிக்கையில்,
நடிகர் ராதாரவி மற்றும் டப்பிங் சங்க நிர்வாகிகள் சேர்ந்து டப்பிங் சங்கத்தில் கோடிக்கணக்கில்
ஊழல் செய்திருப்பதை தொழிலாளர் இணை ஆணையர் உறுதி செய்தார்.
1) வெறும் 47 லட்சத்திற்கு நிலம் வாங்கிவிட்டு, உறுப்பினர்களிடம் சுமார் 1 கோடியே 25 லட்சத்திற்கு பொய் கணக்கு காட்டிய,
ராதாரவி தலைமை நிர்வாகம் டப்பிங் சங்கத்தில் நிதி மோசடி/கையாடல் செய்திருப்பதும்,
பத்திர பதிவுத் துறையை ஏமாற்றி சொத்தை பதிவு செய்ததும் விசாரணையில் அம்பலமானது.
2) 2017 முதல் தொழிலாளர் நலத்துறைக்கு போலி ஆவணங்களை டப்பிங் சங்கம்
சமர்பித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் வெட்ட வெளிச்சமானது.
3) குழந்தை தொழிலாளர் சட்டத்தை மீறி, 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களை டப்பிங் சங்கத்தில் உறுப்பினர்களாக்கி,
பல ஆண்டுகளாக அவர்களிடமும் கமிஷன் வசூலித்து சட்டவிரோதமாக மோசடி செய்துவந்திருப்பதும் விசாரணையில் வெளிவந்தது.
4) ஒவ்வொரு டப்பிங் கலைஞர்களிடமும் அதிகப்படியான சந்தா வசூல் செய்துவிட்டு,
தொழிலாளர் நலத்துறைக்கு கணக்கு காட்டும் போது, குறைந்த தொகையை வசூலித்த்தாக
பொய் சொல்லி தொழிலாளர் நலத்துறையை ஏமாற்றிவந்ததும் பகிரங்கமானது.
5) 2017 முதல் பொதுக்குழுவை சட்டப்படி நடத்தாமல், உறுப்பினர்களிடம் முறையாக கணக்கறிக்கை தந்து ஒப்புதல் பெறாமல்,
பல கோடி அளவில் நடிகர் ராதாரவி டப்பிங் சங்கத்தில் பொய்க்கணக்கு எழுதி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
6) தொலைபேசி கட்டணம், பெட்ரோல், வாங்கிய செலவு முதல் இல்லாத WEBSITE டிற்கு லட்சக்கணக்கில்
செலவு கணக்கு காட்டியது வரை அனைத்திலும் மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
7) பல ஆண்டுகளாக பல லட்சங்கள் நஷ்டம் அடைந்துவிட்டதாக போலி நஷ்ட கணக்கு காட்டிவந்ததும் வெளிவந்தது.
8) சங்க நிதியில் முறைகேடு நடந்திருப்பதை கேள்வி கேட்ட உறுப்பினர்களை சட்ட விரோதமாகவும்,
ஜனநாயகத்திற்கு எதிராகவும் சங்க நீக்கம் செய்திருப்பதும் பகிரங்கமானது.
9) 15 நாட்களுக்குள் கணக்கு கேட்டிருக்கும் உறுப்பினர்களுக்கு உரிய ஆவண நகல்களை
டப்பிங் சங்க நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் ராதாரவிக்கும், அவர் தலைமையிலான டப்பிங் சங்க நிர்வாகத்திருக்கும் எதிராக நிரூபணமான குற்றங்கள் அனைத்திற்கும்,
தொழிலாளர் நலத்துறையே நீதிமன்றத்தில் வழக்கு தொடர, மனுதார்களுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதன் மூலம், நடிகர் ராதாரவி டப்பிங் சங்க நிர்வாகத்தில் இருந்துக்கொண்டு இத்தனை
ஆண்டுகளாக பல கோடி நிதி மோசடி செய்திருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
மேலும், ராதாரவி செய்த குற்றங்களுக்கு துணை நின்று அவர் செய்திருக்கும் குற்றங்களை மறைத்து
அவரை காப்பாற்றி வந்த மற்ற நிர்வாகிகளும் குற்றங்களுக்கு துணை போன
குற்றத்திற்காக வழக்குகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், நடிகர் ராதாரவி மற்ற நிர்வாகிகள் மீது என்னென்ன நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்று டப்பிங் கலைஞர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்போடும் பரபரப்போடும் இருக்கிறார்கள்.
23 சங்கங்கள் உள்ளடக்கிய FEFSI அமைப்பில் அங்கம் வகித்து மும்முரமாக இயங்கிவரும் டப்பிங் சங்கத்தில்
அதன் நிர்வாகிகள் செய்துவந்திருக்கும் இந்த நிதி மோசடி பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
நடிகர் ராதாரவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்ட இந்த நிலையில், FEFSI அமைப்பு அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கும்?
அரசியல் ரீதியாக நடிகர் ராதாரவியை பாஜக கட்சியிலிருந்து விலக்குமா?
என பல கேள்விகளுக்கு பதில், வரும் நாட்களில் தெரியவரும்.
