
தமிழக சட்டப்பேர்வையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, கடந்த 2021 செப்டம்பர் 13-ம் தேதி ஏகமனதாக சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், 142 நாட்களுக்குப் பின் கடந்த ஒன்றாம் தேதி, ஆளுநரின் தனிச் செயலர் மூலம் நீட் விலக்கு மசோதா, தனக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீட் விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் முதலில் சபாநாயகர் அப்பாவு பேசினார். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அப்போது நீட் தேர்வு முறையானது என்று ஆளுநர் கடிதம் அனுப்பி உள்ளார். உயர்மட்ட குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
காமாலை கண்ணால் பார்ப்பது போன்று ஒரு தலைபட்சமான முறையில் குழுவின் அறிக்கை உள்ளது என ஆளுநர் கூறியுள்ளார்.
உயிரியல், வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே மாநில பாடத்திட்டம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொது வெளியில் வெளியிட்டது உகந்ததா? என்று சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். எனது பொறுப்பில் இருந்து நான் கடுகளவும் தவற மாட்டேன்.
இங்கு பேசுகின்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவு மீதான கருத்துக்களை மட்டும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில் ஆளுநரைப் பற்றி கண்டிப்பாக இங்கே பேசக்கூடாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன். எனக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தை செய்தி உரையாக பேரவையில் முன் வைக்கிறேன் என்றார்.
அதன் பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்து பேசினார். அவர் பேசி முடித்ததும் அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒவ்வொருவராக பேசினார்கள்.
சட்டசபை சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டதை அனைத்துக் கட்சி தலைவர்களும் வரவேற்றனர்.
ஆனால் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் கவர்னரின் நடவடிக்கையை ஆதரித்து பேசினார்கள்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில், மீண்டும் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி,இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில், நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நீட் விலக்கு மசோதா இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ஒப்படைக்கப்பட்டது.
