
சென்னையை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள முதலைப் பண்ணையில், 17 வகைகளை சேர்ந்த சுமார் 2,000 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஆசியா கண்டத்திலேயே அதிக முதலைகள் பராமரிக்கப்படும் பண்ணையாக இந்த முதலைப்பண்ணை திகழ்ந்து வருகிறது. இங்கே பராமரிக்கப்படும் பெரும்பாலான முதலைகள் சதுப்புநில முதலைகள் ஆகும்.
இத்தகைய பெருமை வாய்ந்த முதலைப்பண்ணையில், நாள் ஒன்றுக்கு கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி என சுமார் 500 கிலோ இறைச்சி வரை முதலைகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடியில் முதலைப் பண்ணை தவித்துவருகிறது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக பார்வையாளர்கள் வரத்து குறைந்ததால் முதலை பண்ணைக்கு வருவாய் குறைந்தது. இதனால் முதலைகளை பராமரிக்க முடியவில்லை என்பதாலும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையிலும் சிக்கி தவித்த முதலை பண்ணை நிர்வாகத்தினர் இங்குள்ள முதலைகளை விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினர்.

இதனை ஏற்ற மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், இங்குள்ள கரியால், நன்னீர், சதுப்பு நில முதலைகள், அமெரிக்க முதலைகள், ஆப்பிரிக்கா மெல்லிய தாடை முதலைகள், சையாமிஸ் முதலைகள், உப்பு நீர் முதலைகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளை சேர்ந்த 350 ஆண் முதலைகள், 650 பெண் முதலைகள் என மொத்தம் ஆயிரம் முதலைகளை இங்கிருந்து குஜராத்திற்கு இடமாற்றம் செய்ய அனுமதி வழங்கியது.
அதன்படி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் உயிரியல் பூங்காவுக்கு முதலைகளை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, கண்டெய்னர் லாரி மூலம் முதலைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதுவரை சுமார் 300 முதலைகள் சென்னையில் இருந்து குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள 700 முதலைகளையும் எடுத்துச்செல்லும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
