செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

தேர்தல் கலாட்டா அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது! 8 பிரிவுகளில் வழக்கு!!

 

சென்னை ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி அரை நிர்வாணமாக்கி தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை சென்னை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது.

இதில், சென்னை ராயபுரம் 49வது வார்டில் தி.மு.க.,வினர் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முறைகேடாக ஓட்டு போட்டதாக அங்கிருந்த அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.இந்த நிலையில், சட்ட விரோதமாக கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபரை அதிமுகவினர் சிறைப்பிடித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையிலேயே சிலர் பிடிபட்ட நபரை தாக்கத் தொடங்கினர்.

 

அப்போது, ​​பிடிபட்ட அந்த நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்டுங்கள் என்றும் கூறிய ஜெயக்குமார் பின்னர் அந்த நபரிடம் சட்டையை கழற்றுமாறு கடுமையாக பேசும் காட்சி இடம்பெற்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இதையடுத்து, அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில், அவரை அரை நிர்வாணமாக ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

அப்போது அந்த நபரிடம் ஜெயக்குமார், “வேறொரு வார்டில் இருந்து வந்த உனக்கு இங்கு என்ன வேலை? திமுகவில் எத்தனை கள்ள ஓட்டு போட்டாய்?” என்று கேட்கும் காட்சி காணொளியில் உள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களுடன் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் பகுதி, பகுதியாக ஊடகங்களில் வெளியாயின.

அதே சமயம், ஜெயக்குமார் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒருவரை அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற செயலை திமுகவினர் கடுமையாக கண்டித்தனர்.

இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வன்முறையை தூண்டுதல், கலகம் விளைவித்தல் உள்பட 8 பிரிவுகளின் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று இரவு ஜெயக்குமார் வசித்து வரும் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, தன்னை காவல்துறையினர் கைது செய்ய வந்ததை அறிந்த ஜெயக்குமார், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார்.

அதில், கள்ள ஓட்டு போட வந்த நபரை பிடித்துக் கொடுத்த என் மீதே வழக்கா என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விவகாரத்தில் ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி அதிமுக எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் மேலிடத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட நடவடிக்கைக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

139 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன