வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதே பள்ளியில் படிக்கும் அவரது மகன் நந்தன் ராம், நாயகி வெண்பாவை காதலிக்கிறார். ஆனால் நந்தன் ராமின் காதலுக்கு வெண்பா எதிர்ப்பு தெரிவிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் நந்தன் ராம், வெண்பாவை காதலிப்பது வெண்பாவின் அப்பாவான பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது. கே.எஸ்.ரவிக்குமார் மீதுள்ள மதிப்பினால், நந்தன் ராமை நேரில் அழைத்து காதல் வேண்டாம் என்று அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்புகிறார். ஆனால் பொன்வண்ணனின் பேச்சை பொறுட்படுத்தாத நந்தன் ராம் தொடர்ந்து வெண்பாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி வருகிறார்.
ஒரு கட்டத்தில் வெண்பாவின் கையை பிடித்து பேசுவதை பொன்வண்ணனும், வெண்பாவின் சித்தப்பா ஆர்.கே.சுரேஷும் பார்த்து விடுகின்றனர். இதையடுத்து இருவீட்டாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில் நந்தன் ராமை தான் காதலிக்கவில்லை என்று வெண்பா மறுக்கிறார். இருப்பினும் விடாப்பிடியாக வெண்பா பின்னால் சுற்றித் திரியும் தனது மகனை தான் சரியாக வளர்க்கவில்லையோ என்ற மனவேதனையில் கே.எஸ்.ரவிக்குமார் பள்ளியிலேயே உயிரை விடுகிறார்.
இந்த நிலையில், வெண்பாவுக்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. இருப்பினும், வெண்பா தன்னை காதலிப்பதாகவே நினைக்கும் நந்தன் ராம், வெண்பாவை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்.
கடைசியில் நந்தன் ராம் – வெண்பாவை கரம் பிடித்தாரா? அல்லது வெண்பா அவர்களது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்தாரா? உண்மையில் வெண்பா, நந்தன் ராமை காதலித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்தை.
மாணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகத்துடன் நந்தன் ராமின் நடிப்பு சிறப்பு. தொடக்கம் முதல் இறுதி வரை நாயகி மீதான தனது காதலில் உறுதியுடன் இருக்குமட கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசியுடன் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். வெண்பாவுக்கு இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பொங்கி வரும் காதலையும் அடக்கிக் கொண்டு குடும்பப் பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் தலைமை ஆசிரியராகவே வாழ்ந்திருக்கிறார். ஊர்வசி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் ஆக்ரோஷமாகவும், பாசமான சித்தப்பாவாகவும் வந்து மிரட்டுகிறார். பொன்வண்ணன், ராமதாஸ், சுஜாதா சிவக்குமார், தம்பி ராமையா, வேல்முருகன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கஞ்சா கருப்பு படம் முழுக்க வருகிறார். காமெடியிலும் கலக்கி இருக்கிறார்.
பள்ளி படிப்பின் போது ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனை, அதில் இருக்கும் சுவாரஸ்யங்கள் என பள்ளிப் பருவத்தை நினைவுபடுத்திய இயக்குநர் வாசுதேவ் பாஸ்கருக்கு பாராட்டுக்கள். முதல் பாதி, பள்ளி படிப்பு, காதல், காமெடி என விறுவிறுப்பாக சென்றாலும், திரைக்கதைக்கு ஏற்றவாறு முதல் பாதியில் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். இரண்டாவது பாதியில் செண்டிமண்ட் காட்சிகள் மூலம் கண்கலங்க வைத்திருக்கிறார்.
விஜய் நாராயணன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. வினோத் குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `பள்ளிப் பருவத்திலே’ பழைய நினைவுகள்.
250 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன