
ஸ்டார் ஜொலிக்குதா? கோடங்கி விமர்சனம் 3/5
- Casting : Kavin, Lal, Aaditi Pohankar, Preethi Mukundhan, Geetha Kailasam, Maran, Kadhal Sukumar, Niveditha Rajappan, Raja Rani Pandiyan, Sanjay Swaroop, Dheeraj
- Directed By : Elan
- Music By : Yuvan Shankar Raja
- Produced By : Rise East Entertainment & Sri Venkateswara Cine Chitra
அன்றாட வாழ்க்கையின் அவஸ்தைகளில் சிக்கி, சின்னாப்பின்னமாகி சினிமாவில் சாதிக்க முடியாமல் இறுதியில் தன்னை ஒரு போட்டோகிராபராக நிலை நிறுத்திக் கொண்ட ஒரு நடுத்தர மனிதனாக லால். அவரின் ஒட்டு மொத்தக் கனவையும் தன் மகன் கவின் தோள்களில் தூக்கி வைக்க… அந்த கனவுடன் , பள்ளிக்கு போகும் ஆறு வயதில் முண்டாசு கட்டிய பாரதியார் வேஷம் போட்டும் கம்பீர மீசையை மறந்து மேடை ஏறிய கவின் நடிப்பில் கூட்டம் மெய்மறக்கச் செய்ய… அப்பாவின் ஆசைப்படி எதிர்காலத்தில் தான் ஒரு நடிகனாக நாயகனாக வர வேண்டும் என்கின்ற கனவையும் தன் மனதில் ஏற்றிக் கொள்கிறான். அந்த கனவு அவனை எப்படி தூக்கத்தையும் நிம்மதியையும் தொலைக்கச் செய்து துரத்தியது என்பதை விவரிக்கிறது இளனின் ஸ்டார் திரைப்படத்தின் திரைக்கதை.
பள்ளி மற்றும் கல்லூரி கால போர்ஷன்களில் கவின் நடித்ததாகவே தெரியவில்லை. இதுதான் அவரின் இயல்பான குணாதிசயமோ என்ற தோற்றம் வருவது போல் அக்காட்சிகளில் அநாயசமாக நடித்திருக்கிறார். அப்பாவிடம் தொலைபேசியில் அழும் காட்சியிலும், அலுவலகத்தில் கோபத்தில் வெடித்துக் கத்தும் காட்சியிலும், தோத்துட்டேன்னு சொல்லாதப்பா என்று அப்பாவின் சட்டையைப் பிடிக்கும் காட்சியிலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கவின் அப்பாவாக வரும் லால், படத்திற்கு மிகப்பெரிய பலம். அம்மாவாக வரும் கீதா கைலாசத்தின் நடிப்பும் யதார்த்தம்.
கல்லூரி கால காதலியாக வரும் ப்ரீத்தி முகுந்தன் அற்புதமாக உணர்ச்சிகளை வெளிக்காட்டி அழகாக வசீகரிக்கிறார். இரண்டாம்பாதியில் வரும் அதிதி போங்ஹர் பரவாயில்லை ரகம்.
நடிகனாக வேண்டும் என்று நினைக்கும் கவின், அவனுடைய குடும்பம், அவனுடைய காதல், அவனுடைய மனைவி.. என குடும்ப கதையாகவே திரைக்கதை பயணிக்கிறது. நடிகனாக வேண்டும் எனும் இலட்சியத்திற்காக கவின் கதாபாத்திரம் அழுத்தமாக போராடாதது ஏன்? என்ற வினாவையும் எழுப்புகிறது. மேலும் ஸ்டாராக ஜொலிக்க வேண்டும் என்பதற்கான கவினின் முயற்சியில் பெரிய அழுத்தமில்லை.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணியிசையும், பாடல்களும் படத்திற்கு பலம். பல இடங்களில் திரைக்கதை நகர மறுத்து நிற்கிறது அங்கெல்லாம் எடிட்டர் கத்திரி போட்டிருந்தால் ஸ்டார் ஜொலித்திருக்கும். திரைக்கதையிலும் இன்னும் அழுத்தம் இருந்திருக்க வேண்டும்.
மொத்தத்தில் ஸ்டார் ஜொலிக்க வேண்டியது மின்னுகிறது.
ஸ்டார் பட கதைப்படியே சொல்லனும்னா “மீசை இல்லாத பாரதி”யாக இளனின் திரைக்கதை.
மதிப்பீடு 3/5
