
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சூரி, வினய் ராய், இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யா “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்து என்னுடைய படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
நாம கொண்டாடிகிட்டு இருக்குற இந்த நேரத்துல தான் உக்ரைன்ல எதுவுமே அறியாத அப்பாவிகள், பொதுமக்கள், குழந்தைகள் என இந்தியாவைச் சேர்ந்த நிறைய பேர் அங்க இருக்காங்க அவங்க பாதுகாப்பாக இந்தியாவுக்கு வரணும், அங்க இருக்க மக்களும் பாதுகாப்பாக இருக்கணும்.
இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர நம்ம அரசாங்கம் நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறது. இருந்தாலும் அங்கிருந்து வெளிவரும் விடியோக்களைப் பார்க்கும் போது மனசு படபடக்குது.
ஒரு தம்பியையும் நாம நேற்று இழந்து இருக்கோம்.
உயிர் சேதம் ஏதும் இல்லாமல் அவர்கள் தாயகம் திரும்பச் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யலாம். எனக்கு கூட்டு பிரார்த்தனை மேல நம்பிக்கை இருக்கு அதுபோல உங்களுக்கும் இருக்குன்னு நம்புறேன்” என்று கூறி சிறிது நேரம் பிராத்தனை செய்தார்.
