செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 25
Shadow

புயல்-மழை நிவாரணம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்த கோரிக்கை மனு

ஒக்கி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், புயல் மற்றும் பருவ மழையினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சமர்ப்பித்தார்:

1. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 747 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும்;

2. தற்போது பேரிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக, உயிரிழப்பிற்கு ரூபாய் 4 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாகவும், ஊனமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தவும், வாழை மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 13,500/-லிருந்து ரூபாய் 1,25,000/- ஆகவும், ரப்பர் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18,000/-லிருந்து ரூபாய் 2,50,000/- ஆகவும் உயர்த்தப்பட வேண்டும்;

3. புயல், காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்படும் உயர் அழுத்த மின்விநியோக கட்டமைப்பு, மின் மாற்றிகள், துணை மின்நிலையங்கள் மற்றும் 11 கிலோவோல்ட்டுக்கு அதிகமான உயர் மின்அழுத்த பாதைகள் ஆகியவற்றிற்கும் தேசிய பேரிடர்
நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி அளிக்கப்பட வேண்டும்;

4. மத்திய அரசின் 90 சதவிகித மான்யத்துடன், 1500 உயர் மின்அதிர்வெண் கம்பியில்லா தொலைதொடர்பு சாதனங்கள் வழங்கவும், தமிழ்நாட்டிலுள்ள கடலோரங்களில் உயர்மின் அதிர்வெண் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்கவும், உயர்மின் அதிர்வெண் சேனல்களை உபயோகிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்;

5. மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை பற்றிய அறிவிப்புகளை தமிழில் தெரியப்படுத்த பிரத்யேக செயற்கை கோள் ரேடியோ அலைவரிசை ஒன்றினை உடனடியாக அமைக்க வேண்டும்;

6. மீனவர்களின் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக கன்னியாகுமரி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண தொலைதொடர்பு வசதி, மீன் பதப்படுத்தும் பூங்கா போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். மேலும், கடல் அரிப்பினை தடுக்கும் பொருட்டு, கடல் அலைதடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும். இப்பணிகளுக்கென 4,218 கோடி ரூபாய் வழங்க வேண்டும்;

7.மீன் பிடிக்க சென்று நாளது தேதி வரை கரை திரும்பாத தமிழக மீனவர்கள் அனைவரையும் தேடி கண்டுபிடித்திட மத்திய பாதுகாப்புத் துறைக்கு மாண்புமிகு பாரத பிரதமர் உத்தரவிட வேண்டும். குறிப்பாக, ஆழ்கடலுக்கு சென்றுள்ள கடைசி மீனவர் கிடைக்கின்ற வரையில் தேடுதல் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்;

8.ஒகி புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 5,255 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும்;

9.மேலும், சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும், இனி சென்னைக்கு வெள்ளத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுவதற்கு 4,047 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும்.

ஆக மொத்தம், ஒகி புயல் பாதிப்புகள், சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளுக்கென 9,302 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

416 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன