
தமிழ்நாட்டில் திருநங்கையாக பதிவு செய்து படித்து முடித்த முதல் திருநங்கை தமிழ்செல்விக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் திருநங்கையாக பதிவு செய்து படித்து முடித்த முதல் திருநங்கை தமிழ்செல்வி ஆவார்.
இவருக்கு தற்போது தேசிய மருத்துவ திட்டத்தின் கீழ் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உதவியாளர் பணி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கணணு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி.
எல்லா திருநங்கைகளையும் போலவே தனது குழந்தைப் பருவத்தில் வீட்டிலும் பள்ளியிலும் துன்புறுத்தல்கள் சந்தித்துள்ளார்.
ஆனால் படிப்பு தான் தனக்கு கை கொடுக்கும் என உணர்ந்த அவர் பல இன்னல்களை தாண்டி பள்ளிப்படிப்பை முடித்தார்.
அதன் பின் செவிலியர் படிப்புக்கு விண்ணப்பித்த போது திருநங்கைகள் விண்ணப்பிக்க முடியாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.
அதன் பின் நீதிமன்றம் சென்று அவருக்கு சாதகமாக உத்தரவு பெற்ற போதும், அவர் ஏற்றுக் கொள்ளப்படாததால் மனித உரிமை ஆணையம் சென்றுள்ளார். அதன் பின்னரே செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய முடிந்துள்ளது.
எங்கள் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. அதை சமூகமும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
திருநங்கைகளை எல்லாரும் ஏற்றுக் கொண்டால் பிச்சை எடுக்கவோ பாலியல் தொழில் செய்யவோ அவசியமில்லை” என்று தமிழ்ச் செல்வி தெரிவித்தார்.
முதலில் ஏற்க மறுத்த அவரது அம்மா தான், தற்போது அவருக்கு பெரும் துணையாக இருந்து வருகிறார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் டிப்ளமோ படிப்பு முடித்த அவர் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கான மருத்துவ தேவைகள் என்ன என்பதை கண்டறிந்து கொள்கை வகுக்க அரசுக்கு உதவி புரியும் இடத்தில் உள்ளார்.
