
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது மார்ச்.31, 2023 வரை கால அவகாசம் வழங்கி நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதித்துள்ளது.
பான் கார்டு என்பது அனைவரும் வாங்கியிருக்க வேண்டும் என்றாலும், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பான் கார்டு என்பது கட்டாயமான ஒன்றாகும்.
ஒருவர் கட்டும் வருமான வரி கணக்கிடப்படுவது பான் எண் அடிப்படையில்தான்.
அதேபோல், ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நம்முடைய அனைத்து பயன்பாட்டிலும் அது தொடர்புடைய ஒன்றாக இருந்து வருகிறது.
வங்கி எண்ணுடன் ஆதார் இணைப்பு, நம்முடைய மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு என்று பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியமாக இருந்து வருகிறது
அந்த வகையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய வருமான வரித்துறை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
அதற்காக கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி காலக்கெடுவாக அறிவித்தது. பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
அப்போதும், பலர் பான் கார்டுடன் ஆதாரை இணைக்காமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
2022 மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன், பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு இன்றுடன் முடிவடையும் நிலையில்,
தற்போது மார்ச் 31, 2023 வரை கால அவகாசம் வழங்கி நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதித்துள்ளது.
அதாவது, நாளை முதல்(ஏப்.1, 2022) அடுத்த மூன்று மாதங்களுக்கு பான் கார்டு எண்ணுடன்,
ஆதார் எண்ணை இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். மூன்று மாதங்களுக்கு பின்னர், பான் ஆதார் இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச்.31 2023க்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1, 2023 முதல் உங்கள் பான் கார்டு செயலிழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
