
வினை விதைத்தவன் வினை அறுக்கத் தொடங்கி விட்டான் இலங்கையில் அதிபருக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டின் முன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இலங்கை அரசின் புதிய விவசாயக் கொள்கையால் அந்நாட்டில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதோடு, உணவுப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளதால் அதிபர் ராஜபக்சேவை பதவி விலகக் கோரி பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது.
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், அதிபர் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கை அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கியத்துறையாக சுற்றுலாத்துறையாக இருந்துவருகிறது. இதுவே அந்நாட்டிற்கு அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலுக்குப் பிறகு, இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளதால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைக் கண்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இலங்கை அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாயக் கொள்கையால், அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதோடு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சாதாரண அரிசி விலையே கிலோ 200 ரூபாயை தாண்டிய நிலையில், பருப்பு 250 ரூபாய்க்கும், சர்க்கரை 215 ரூபாய்க்கும், உளுந்து 2 ஆயிரம் ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.
எரிபொருட்கள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை நேற்றிரவு முற்றுகையிட்டனர்
உடனடியாக பதவி விலக வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர், அப்போது போராட்டக்கார்களில் சிலர் அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றி, ராணுவ வாகனத்திற்கு தீ வைத்தனர்.
மேலும் வீட்டு சுவரை இடித்து செங்கற்களை போலீசார் மீது வீசி தாக்கியதால், அங்கு போர்க்களம் போல காட்சி அளித்தது
அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.
இதனால், அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. இந்த போராட்டத்தில் பத்திரிகையாளர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
4 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், கொழும்பு நகரின் வடக்கு, தெற்கு மற்றும் நுகேகொட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
