புதன்கிழமை, ஜூலை 8
Shadow

பரபரப்பான 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலை… வழக்கு கடந்து வந்த பாதை

மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்தார்.
அப்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. இதில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்படும் புகார் தொடர்பான வழக்கும் அடங்கும்.
இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலர் மீதும் மற்றும் சில நிறுவனங்களின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டும், அமலாக்கப் பிரிவின் சார்பில் 2014-ம் ஆண்டும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. 122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு 30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார் கள்.
இந்த வழக்கில் 154 சாட்சிகளை சி.பி.ஐ. விசாரணை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2015-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி இறுதி வாதம் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 19-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரும் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.
தனிக்கோர்ட்டில் நேற்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதால், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதியின் தீர்ப்பை கேட்டதும், கோர்ட்டுக்கு வந்திருந்த ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தனிக்கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் அறிவித்து உள்ளது.
2ஜி வழக்கு கடந்து வந்த பாதை
2007 மே 16 : ஆ.ராசா தொலைத்தொடர்பு மந்திரியாக பொறுப்பேற்றார்.
ஆக : 2ஜி அலைவரிசை உரிமம் ஒதுக்கீட்டிற்கான நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு துறை தொடங்கியது.
செப் 25: 2ஜி அலைவரிசை உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை அக்.1 என தொலை தொடர்பு அமைச்சகம் நிர்ணயித்தது.
2008 ஜன 10: முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்கிற அடிப்படையில் 2ஜி அலைவரிசை உரிமம் வழங்க முடிவு செய்த தொலைத்தொடர்பு துறை, 2007 செப்.25-ந்தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தது.
அதே நாள் மதியம் 2.45 மணியளவில் தொலைத்தொடர்பு துறை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில், ‘2ஜி அலைவரிசை உரிமம் பெற விரும்பும் நிறுவனங்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இன்று (ஜனவரி 10, 2018) மாலை 4.30 மணிக்குள் தொலைத்தொடர்பு துறை தலைமையகத்துக்கு கொண்டு வரவேண்டும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி ஸ்வான் டெலிகாம், டாடா டெலி சர்வீஸ், யுனிடெக், லூப் டெலிகாம், ஸ்பைஸ், ஐடியா, டேட்டாகாம், வீடியோகான், ஷ்யாம் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் 2ஜி அலைவரிசை உரிமம் பெற்றன.
* ஸ்வான் டெலிகாம், யுனிடெக் மற்றும் டாடா டெலி சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை ஈடிசாலட், டெலிநார், டோகோமோ போன்ற நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தன.
2009 நவ 20: 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் பெருநிறுவனங்களின்(கார்ப்பரேட்) தலையீடு இருந்ததை வருமான வரித்துறை உறுதி செய்தது. ஆ.ராசாவுக்கும், நீரா ராடியாவுக்கும் நேரடி தொடர்பு இருந்ததும் உறுதியானது.
2010 மார்ச் 31: 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டு நடைமுறையில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என மத்தியக் கணக்கு தணிக்கை குழு (சி.ஏ.ஜி.) அறிக்கை தாக்கல் செய்தது.
மே 6: ஆ.ராசாவுக்கும், நீரா ராடியாவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் ஊடகங்களில் ஒலிபரப்பானது.
நவ 10: 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்தது.
நவ 14-15: தொலைத்தொடர்பு துறை மந்திரி பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தார். கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக தொலைத்தொடர்பு துறை ஒப்படைக்கப்பட்டது.
2011 பிப் 2: ஆ.ராசா கைது.
பிப் 17: ஆ.ராசா மற்றும் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகிய இருவரும் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மார்ச் 14: 2ஜி ஊழல் வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டை டெல்லி ஐகோர்ட்டு ஏற்படுத்தியது.
மார்ச் 16: சாதிக்பாட்சா மரணம்.
மார்ச் 29: 2ஜி ஊழல் வழக்கில், மார்ச் 31-ந்தேதிக்கு பதிலாக ஏப்ரல் 2-ந்தேதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 2: ஆ.ராசா, ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட 9 பேர் மீதும், ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய 3 நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஏப்ரல் 25: 2ஜி ஊழல் வழக்கில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.யுமான கனிமொழி உள்ளிட்ட 4 பேர் மீது சி.பி.ஐ., 2-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
மே 20: சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அக் 23: 2ஜி ஊழல் வழக்கில் 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டன.
நவ 11: 2ஜி ஊழல் வழக்கில் விசாரணை தொடங்கியது.
நவ 23: பெருநிறுவனங்களின் இயக்குனர்களான நாயர், தோஷி, பிபாரா, சந்திரா மற்றும் கோயங்கா ஆகிய 5 பேருக்கு சுப்ரீம் கோட்டு ஜாமீன் வழங்கியது.
நவ 28: கனிமொழி, குமார் மொரானி, ஆசிப், ராஜீவ் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
டிச 12 : 2ஜி ஊழல் வழக்கில், மேலும் சில தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. 3-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
2012 பிப் 2: ஆ.ராசா பதவி காலத்தில் வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
2ஜி ஊழல் வழக்கில் அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என சி.பி.ஐ. விடுத்த கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த முடிவை சிறப்பு நீதிமன்றத்திடம் விட்டுவிடுவதாக அறிவித்தது.
பிப் 4: 2ஜி ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கக்கோரிய சுப்பிரமணிய சாமியின் மனுவை தனிக்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மே 15: ஆ.ராசாவுக்கு ஜாமீன்.
ஆக 24: 2ஜி முறைகேட்டால் ப.சிதம்பரம் பயன் அடைந்ததற்கான முகாந்திரம் இல்லை என கூறி, அவருக்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
2013 டிச 9: பாராளுமன்றத்தில் கடும் அமளிக்கிடையே 2ஜி ஊழல் குறித்த அறிக்கையை பாராளுமன்ற கூட்டுக் குழு தாக்கல் செய்தது.
2014 ஏப் 25: ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது அமலாக்க துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மே 5: 2ஜி உரிமம் ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கின் இசைவுக்கேற்ப தான் செயல்பட்டதாக ஆ.ராசா கோர்ட்டில் வாக்கு மூலம் அளித்தார்.
அக் 31: 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
2015 ஜூன் 1: 2ஜி ஊழல் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கிடைத்ததாக அமலாக்க துறை குற்றம் சாட்டியது.
ஆக 19: ஆ.ராசா மீது சி.பி.ஐ. சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்தது.
2017 ஏப் 19: தனிக்கோர்ட்டில் 2ஜி ஊழல் வழக்கின் மீதான வாதம் முடிவடைந்தது.
டிச 21: 2ஜி ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.   முறை கேடு வழக்கில் இருந்து  ஆ.ராசா- கனிமொழி  உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ, அமலாக்கத்துறை தவறிவிட்டது என நீதி மன்றம் கூறி உள்ளது.
2ஜி ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக யூகித்தது, இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதை என்பது நிரூபணம் ஆகிவிட்டதாக ஆ.ராசா கூறினார்
கனிமொழி:-  2ஜி அலைக்கற்றை வழக்கில் நியாயம், நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய அழுத்தம் இருந்த நிலையில் தற்போது நிம்மதி கிடைத்துள்ளது.
450 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன