புதன்கிழமை, மே 15
Shadow

விண்ணை நோக்கிப்பாயும் ராக்கெட் வேகத்தை விட இந்த பேப்பர் ராக்கெட் குறை சொல்ல முடியாத படி சீறிப்பாய்கிறது

 

நடிகர்கள் : காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், கெளரி கிஷன், நிர்மல் பாலாழி, காளி வெங்கட், சின்னி ஜெயந்த், நாகிநீடு
இசை : சைமன் கே.கிங், தரண்குமார், வேத்சங்கர்
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன்
தயாரிப்பு : ஸ்ரீநிதி சாகர்
இயக்கம் : கிருத்திகா உதயநிதி

சினிமாவுக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்ள  வேண்டிய தர்மசங்கடங்களை தவிர்த்துவிட்டு சுதந்திரமாக கதை சொல்ல வேண்டுமென்றால் ஓடிடி தளம் தான் அதற்கு சரியான வழி. அந்த வழியை பின்பற்றி வந்துள்ள வெப் சீரியல்தான் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த ‘பேப்பர் ராக்கெட்’..

அப்பாவின் திடீர் இழப்பைத் தாங்க முடியாமல் மனநெருக்கடிக்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா,கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிட்டுகிறது.

ஆளுக்கொரு பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள்.பயணம் எங்கே? அந்தப் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை செல்லுலாய்ட் கவிதையாகச் சொல்லியிருக்கிறார் கிருத்திகா.

 காளிதாஸ் ஜெயராமுக்கு சிறப்பான வேடம். அதற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கதாப்பாத்திர வடிவமைப்பு அழகாக இருப்பதோடு படம் பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையிலும் இருக்கிறது.

நாயகி தான்யா மன அழுத்தத்திற்கு காரணமாக சொல்லப்படும் சம்பவம், பல படங்களில் சொல்லப்பட்டு வருவது தான் என்றாலும், தற்போதும் சமூகத்தில் தடுக்கப்பட முடியாத அசிங்கமாகவே இருந்து வருகிறது. மிக கோபமான சுபாவம் கொண்டவராக காட்டப்படும் தான்யா ரவிச்சந்திரன், வேடத்திற்கு ஏற்றபடி நடித்திருப்பதோடு, ஆண்வர்க்கத்திற்கு பாடம் எடுக்கிறார்.

எதை பார்த்தாலும் மரணம் தொடர்பாகவே பேசும் கருணாகரனின் கதாப்பாத்திரம் ஆரம்பத்தில் ஏரிச்சல் உண்டாக்கினாலும், அதன் பிறகு அவர் கொடுக்கும் விளக்கம் மூலம் அந்த கதாப்பாத்திரமும் ரசிக்கும்படி மாறிவிடுகிறது.

கெளரி கிஷனுக்கு ஏற்பட்ட பிரச்சனை மன அழுத்தத்தையும் தாண்டியது. அதன் வலி பெரியது என்றாலும், அதையும் புன்னகையோடு விவரித்து, இதுவும் கடந்து போகும் என்ற ரீதியில் அந்த கதாப்பாத்திரம் கடந்து செல்வது அழகு.

ரேணுகாவின் கதாப்பாத்திரம் சற்று அதிர்ச்சியளித்தாலும், அந்த கதாப்பாத்திரத்தையும் ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள். அவரும் வழக்கம் போல் தனது வசன உச்சரிப்பால் அந்த கதாப்பாத்திரத்தை மகிழ்ச்சியாகாவே கடந்து போக செய்கிறார்.

மொத்தத்தில் விண்ணை நோக்கிப்பாயும் ராக்கெட் வேகத்தை விட இந்த பேப்பர் ராக்கெட் குறை சொல்ல முடியாத படி சீறிப்பாய்கிறது. இயக்குனராக கிருத்திகா இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறார்

79 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன