
“குலு குலு” சந்தானம் படமே இல்ல – கோடங்கி விமர்சனம்
நடிகர்கள் : சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன்.
ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன்
இசை – சந்தோஷ் நாராயணன்
எடிட்டிங்: பிலோமின் ராஜ்
தயாரிப்பு: – சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எஸ்.ராஜ் நாராயணன்
இயக்கம் – ரத்னகுமார்
வெளியீடு – ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பிஆர்ஒ : யுவராஜ்;
நக்கல், நையாண்டி, குசும்பு கும்மாளம் போட்டு காமெடி மட்டுமே செய்து வந்த சந்தானம் காமெடி வாலை சுருட்டி கக்கத்தில் வைத்து அமுக்கிக் கொண்டு… அது வெளியில் தெரியாதபடி குணச்சித்திர வேடம் என்னும் பல வர்ண அங்கியை மாட்டிக் கொண்டு வலம் வந்திருக்கும் படம்தான் குலுகுலு… இதில் சந்தானம் பேர் கூகுள்… இந்த கூகுளை சுத்தித்தான் முழுபடமும் நகர்கிறது… சில இடங்களில் நகர மறுத்து நிற்கவும் செய்கிறது.
அமலாபாலின் ஆடைகளை களைந்து பேப்பர் டிரஸ் கொடுத்த இயக்குனர் ரத்ன குமார் இதில் மிச்சம் மீதி துண்டு துக்கடா துணிகளை எடுத்து ஒரு அங்கி செய்து சந்தானத்துக்கு மாட்டியிருக்கிறார்.
இனி கதைக்கு வருவோம்…
அமேசான் காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். அந்த பழங்குடி மக்களை சிலர் துன்புறுத்தி அழைத்துச் செல்ல சிறு வயது சந்தானம் அவர்களிடமிருந்து தப்புகிறார். நாடு நாடாக சுற்ற போகும் இடத்தில் அந்தந்த மொழிகளை கற்றுக்கொண்டு அலைந்து திரிந்து கடைசியாக சென்னையில் வந்து செட்டிலாகிறார்.
13 மொழிகளைப் பேசும் திறமை கொண்ட சந்தானத்திற்கு தமிழும், தமிழகமும் பிடித்துப் போகிறதாம்.
கூகுள் என்ற பெயருடன் அழைக்கப்படும் சந்தானம் யார் உதவி கேட்டாலும் ஒடோடி போகிறார்.
தங்கள் நண்பனை யாரோ கடத்திவிட்டதாக மூன்று இளைஞர்கள் வந்து சந்தானத்திடம் உதவி கேட்க நால்வரும் இணைந்து காணாமல் போனவரைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பயணத்தில் காணாமல் போனவரின் காதலியும் இணைகிறார். இது ஒருபுறமிருக்க இறந்து போகும் கோடீஸ்வர அப்பாவிற்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவியின் மகள் பிரான்சிலிருந்து இவரின் இறுதிச் சடங்கிற்கு வர, சொத்தில் பங்கு கேட்டு வந்து விடுவாளோ என்கிற பயத்தில் அந்த பெண்ணை கொலை செய்ய 2 அண்ணன்கள் திட்டமிடுகிறார்கள்.
இதில் சந்தானம் எங்கு வந்தார்? என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? அந்த வெளிநாட்டு பெண்ணை காப்பாற்றினாரா? காணாமல் போனவர் கிடைத்தாரா இல்லையா? இதுதான் குலுகுலு.
இப்ப சொன்ன கதைக்கும் டைட்டில் குலுகுலுவுக்கும் என்ன சம்மந்தம்னு ரொம்ப யோசிக்காம அடுத்த விஷயத்துக்கு ஓடிடலாம்.
வழக்கமான நக்கல், நையாண்டி சந்தானம் இதுல இல்ல. பஞ்ச் சுத்தமா இல்லவே இல்லை. மொத்தத்துல இது சந்தானம் படமே இல்லை.
ஆனா புது சந்தானம் உருவாகி இருக்கார். அந்த மெனக்கெடுதல் சந்தானத்துக்கு நல்லதாதான் முடிஞ்சிருக்கு.
சந்தோஷ் நாராயணன் இன்னும் மெனக்கெட்டிருக்கனும் பல இடங்களில் சலிப்பைத் தருகிறார்.
பலபேர் இருந்தாலும் கூகுள் சந்தானம் தான் தெரிகிறார்.
இயக்குனர் ரத்னகுமார் இன்னும் மண்டைய கசக்கி சாறு எடுத்திருந்தா குலு குலு வீறு கொண்டு ஓட்டம் எடுத்திருக்கும்.
அப்ப இப்ப ஓடலியான்னு கேக்குறீங்களா… சந்தானம் படம்னு நம்பி வந்து ஏமாந்த ரசிகரிடம் போய் கேட்டா பதில் சரியா வரும்.
– *கோடங்கி*
*மதிப்பீடு 2.5/5*
