சனிக்கிழமை, மே 11
Shadow

அரசியலுக்கு முன்னோட்டம் – ரஜினிகாந்த் ரசிகர்களை நாளை சந்திக்கிறார்

அரசியலுக்கு முன்னோட்டமாக ரஜினிகாந்த் நாளை முதல் தொடர்ந்து 6 நாட்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

கடந்த முறை ரஜினி காந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார்.
எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை.
இந்த நிலையில், நாளை (26-ந்தேதி) முதல் ரஜினி மீண்டும் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.
தமிழருவி மணியன் சமீபத்தில் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது புதிய கட்சி குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ரஜினி விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த முறை நிச்சயம் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வரும் என்று ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நாளை காஞ்சீபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்ட ரசிகர்கள் ஆயிரம் பேரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு தொடங்குகிறது.
மதியம் 1 மணிவரை ரசிகர்களை சந்திக்கிறார். ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள் அனைவருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் உடனே ரசிகர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
27-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களையும், 28-ந்தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்களையும் சந்திக்கிறார்.
29-ந்தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு, ரசிகர்களையும் ரஜினி சந்திக்கிறார். வெளி மாவட்ட ரசிகர்கள் குறிப்பிட்ட நாட்களில் சென்னை வர ரஜினியின் அந்தந்த மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரசிகர்களை 30, 31 ஆகிய 2 நாட்கள் ரஜினி சந்திக்கிறார். முதல் நாள் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மாவட்ட ரசிகர்களில் ஒரு பகுதியினரை சந்திக்கிறார். மறுநாளும் விடுபட்ட சென்னை ரசிகர்களை சந்திக்கிறார்.
ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ரசிகர்கள் அனைவருக்கும் மாவட்ட ரஜினி மன்றம் சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பப்பட்டுள்ளன. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு வர வேண்டும். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் ஆயிரம் பேர் வீதம் 6 நாட்களில் மொத்தம் 6 ஆயிரம் ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். அடையாள அட்டை இல்லாதவர்கள் ராகவேந்திரா திருமண மண்டபம் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
272 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன