சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கைது!

வில்லியனூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபரை கொல்ல வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர் அருகே அரசூர் காலனியில் ஒரு வெட்டவெளி பகுதியில் ஒரு கும்பல் வெடிகுண்டு தயாரிப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கோபாலன் கடையை சேர்ந்த குமார் என்ற கலைக்குமார் (வயது22), சதீஷ்(21), சுரேஷ்(21), தீனா என்ற யுவராஜ்(21), சதீஷ்குமார் (23) மற்றும் வாழப்பட்டாம் பாளையத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலியை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் இதற்கு அந்த பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண்ணின் தாயார் இதுகுறித்து கணுவாயப்பேட்டையை சேர்ந்த சசிதரன் என்பவரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து சசிதரன் செல்போனில் குமாரை தொடர்பு கொண்டு மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குமார் சசிதரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து தனது கூட்டாளிகளிடம் தெரிவித்தார்.

அதற்கு அவர்களும் சசிதரனை கொலை செய்ய ஒப்புகொண்டனர்.

அதன்படி சசிதரனின் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு குமார் கூறியுள்ளார்.

அதற்கு முன் வெடிகுண்டை தயாரித்து அதன் மூலம் சசிதரனை கொல்ல முடிவு செய்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து வீச்சரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தக்க நேரத்தில் போலீசார் தகவல் அறிந்து கொலை சதி திட்டத்தை முறியடித்ததால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது.

241 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன