திங்கட்கிழமை, மே 13
Shadow

வாணி ஜெயராம் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை தகவல்!

வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.

‘வீட்டுக்குவந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ முதலான படங்களில் பாடியிருந்தாலும் ‘தீர்க்கசுமங்கலி’ படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார்.

சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

வாணி ஜெயராம் நேற்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பாடகி வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், மேசை மீது விழுந்து தலையில் பலத்த அடி-காயம் தான் பிரபல பாடகி வாணி ஜெயராம் இறப்பிற்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயர மேசை மீது அவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், நெற்றியிலும், மேசையில் விளிம்பிலும் ரத்தக்கறைகள் இருந்தது என்று தடவியல் நிபுணர் சோதனையில் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில், அவரது வீட்டிற்கு சந்தேகப்படும்படி யாரும் சென்றதற்கான அடையாளங்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

98 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன