
ஆர்.கே.நகரில் துணிச்சலாக களம் கண்ட பாஜகவை மட்டும் குறை கூறுவது எந்த வகையில் நியாயம் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
ஆர்.கே.நகரில் நாங்கள் வாங்கியிருக்கும் வாக்குகள் எங்கள் ஆட்சிக் கனவின் முற்றுப்புள்ளி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியிருக்கிறார். அவர் தீவிரமாக ஆதரித்து வரும் திமுக கூட்டணியின் வாக்கு, 33 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைந்திருக்கிறது. அப்படியெனில், திமுகவின் ஆட்சிக் கனவின் முற்றுப்புள்ளி என்று அதை எடுத்துக்கொள்ளலாமா?. ஆக, இந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் பணத்தின் குறியீடாக இருக்கலாமே தவிர பலத்தின் குறியீடு அல்ல.

அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கூட்டணிக்கு வாக்குகளை பெற்றுத் தர முடியவில்லை என்பதை மறைத்து பாஜகவுக்கு எதிராகவும், தினகரனுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். தினகரன் ஜெயலலிதாவின் வாரிசு என்று அவர் கூறி வருவதை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனிக்க வேண்டும்.
தினகரன் வெற்றி பெற்றது அவரது அரசியல் வாழ்க்கைக்காக. தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அல்ல என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர வேண்டும்.
