வியாழக்கிழமை, மே 16
Shadow

முழுக்க முழுக்க இலண்டனில் படமாக்கப்பட்ட ரிச்சர்ட்ரிஷி நாயகனாக நடித்துள்ள புதியபடம் “சில நொடிகளில்”

 

முழுக்க முழுக்க இலண்டனில் படமாக்கப்பட்ட ரிச்சர்ட்ரிஷி நாயகனாக நடித்துள்ள புதியபடம் “சில நொடிகளில்”

நடிகர் ரிச்சர்ட்ரிஷி நாயகனாக நடித்துள்ள புதியபடம் சில நொடிகளில்.வினய்பரத்வாஜ் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் நாயகிகளாக யாசிகா ஆனந்த்,புன்னகைப்பூ கீதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

“எஞ்சாமி” பாடலுக்கு ஒளிப்பதிவு செய்த அபிமன்யு சதானந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சைஜல் பி.வி படத்தொகுப்பு செய்திருக்கிறார். மசாலா காஃபி, பிஜோன் சுர்ராவ், தர்ஷனா கே.டி, ஸ்டாக்காடோ, ரோகித் மட் ஆகிய ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.

எஸ்குயர் புரொடக்‌ஷன்ஸ் யுகே (Esquire Productions UK) மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

முழுக்க முழுக்க இலண்டனில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் முக்கோண காதல் கதையாகவும், க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் உருவாகியுள்ளது.

படம் குறித்து இயக்குநர் வினய் பரத்வாஜ் கூறியதாவது….

இந்தப்படத்தில், ரிச்சர்ட் ரிஷி ஒரு காஸ்மட்டிக் சர்ஜன், அவர் வாழ்க்கையில் பல மாடல் அழகிகளைச் சந்திக்கிறார். அப்படி ஒருவர் தான் யாஷிகா ஆனந்த். இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் ரிச்சர்ட் – புன்னகை பூ கீதா ஆகிய தம்பதியர் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பதுதான் படம்.

ரிச்சர்ட் வலிமையான கதாபாத்திரங்களையும் சிறப்பாகச் செய்யக் கூடியவர். கிராமத்துப்பின்னணியில் வெளியான அவரது படங்களிலிருந்து அவரை வேறு ஒரு தோற்றத்தில் இந்தப் படம் காட்டும்.அதற்கு அவர் சரியாகப் பொருந்தியிருக்கிறார். யாஷிகா ஆனந்த் விபத்துக்குப் பிறகு நடிக்கும் படம் இது. அவர் ஒரு மாடல் என்பதால், கவர்ச்சியாக நடித்திருப்பதோடு, தன்னை நிரூபிக்கும் வகையிலும் நடித்திருக்கிறார். ரிச்சர்ட், யாஷிகா, புன்னகை பூ கீதா இந்த மூன்று பேரைச் சுற்றித் தான் கதை நடக்கும். இவர்களைத் தவிர இலண்டனைச் சேர்ந்த சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

‘சில நொடிகள்’ ஸ்டைலிஷான படமாக மட்டும் இன்றி தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரகத்தில் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசையும் பேசப்படும் விதத்தில் இருக்கும்.

படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒலி வடிவமைப்பாளர் ஆகிய அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேடிப்பிடித்திருக்கிறோம். கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு மக்கள் திரையரங்கிற்கு வந்து ஒரு படத்தைப் பார்க்கிறார்கள் என்றால் அது கதையளவில் மட்டும் சிறப்பாக இருந்தால் போதாது, தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. திரையரங்கில் படம் பார்க்கும் இரசிகர்களுக்கு புதுவித உணர்வைக் கொடுக்க வேண்டும், அதுபோன்ற படங்களைத் தான் மக்களும் விரும்புகிறார்கள். அதனால், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் பேசப்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

படத்தின் பணிகள் முடிந்துவிட்டன.விரைவில் படம் வெளியாகும் என்றார்.

நடிகர் ரிச்சர்ட் ரிஷி படம் குறித்துக் கூறியதாவது…..

தொடர்ந்து இரண்டு வெற்றிகளைக் கொடுத்த பிறகு, என்னைத் தேடி நிறையக் கதைகள் வந்தன. ஆனால், அவை அனைத்துமே ஒரே மாதிரியாகவும், இதற்கு முன்பு என் நடிப்பில் வெற்றி பெற்ற படங்களின் சாயலிலும் இருந்தன. அதனால் அந்தக் கதைகளை நிராகரித்து விட்டேன். வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அந்தச் சமயத்தில் தான் வினய், இந்தக் கதையை என்னிடம் சொல்லி திரைக்கதையைக் கொடுத்தார், படித்துப் பார்த்ததும் வித்தியாசமாக இருந்ததோடு ஹாலிவுட் படங்கள் பாணியில் ஸ்டைலிஷாகவும் இருந்தது. அதே சமயம், நமது கலாச்சாரத்தைத் தொடர்புபடுத்துவதுபோலும் கதை இருந்ததால் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன்.

கதை முழுக்க முழுக்க இலண்டனில் நடக்கிறது. இலண்டனை கதைக்களமாகத் தேர்வு செய்ததற்குக் காரணம், படத்திற்கு புதிய தோற்றம் கொடுப்பதற்காகத் தான். அதுமட்டும் அல்ல, இந்தக் கதை சர்வதேச அளவில் இருப்பதாலும், என்னுடைய கதாபாத்திரம் காஸ்மட்டிக் சர்ஜன், யாஷிகா ஆனந்தின் கதாபாத்திரம் மாடல்.இந்தத் துறைகளில் இலண்டன், பிரான்ஸ் நாடுகள்தாம் தாம் முன்னிலையில் உள்ளன.எனவே, கதைக்களமாக இலண்டனைத் தேர்வு செய்தோம்.

புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் மற்றும் நான் ஆகிய மூன்று பேரைச் சுற்றித்தான் கதை. முக்கோணக் காதல் கதைபோல் பயணிக்கும். பிறகு மர்டர் மிஸ்டரி மற்றும் க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக மாறும். அதாவது நொடிப் பொழுதில் ஒருவரது வாழ்க்கை நினைத்துப் பார்க்காத முடியாதபடி மாறிவிடும். அதனால் தான் ‘சில நொடிகளில்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். நிச்சயம் இது ஒரு வித்தியாசமான படமாக, இரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் என்கிறார் உறுதியாக.

தயாரிப்பாளர் டாக்டர்.முரளிமனோகர் கூறியதாவது….

ரிச்சர்ட் ரிஷி நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல மனிதர், நான் இந்தத்துறையில் பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன், பல ஹீரோக்களுடன் பயணித்திருக்கிறேன். ஆனால், நான் பார்த்த நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மனிதர் ரிச்சர்ட் ரிஷி. அவருக்கு இந்தப்படம் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும். இயக்குநர் விஜய் பரத்வாஜ் படத்தைத் தொழில்நுட்ப ரீதியாகத் தரமான படமாகக் கொடுத்திருக்கிறார். இலண்டனில் இந்தப்படத்திற்கு நான்கு லொக்கேஷன்கள் தேவைப்பட்டன. ஆனால், அந்த நான்கு லொக்கேஷன்களும் ஒரே இடத்தில் கிடைத்தது மிகப்பெரிய ஆச்சரியம். அதுமட்டும் இன்றி படத்தில் வரும் ஒரு வீடு மிக அழகாக இருப்பதோடு, கதைக்கு மிக சரியாகவும் பொருந்தியிருக்கிறது. நிச்சயம் படம் இரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்றார்.

இப்படம், நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

66 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன