ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் ஆய்வு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் வசித்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிவந்தனர். இதையடுத்து, வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, வேதா இல்லத்தை முழுமையாக அரசுடையாக்கும் பணிகள் இன்று (டிசம்பர் 30 ) தொடங்கின. மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் வட்டாட்சியர், வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் இன்று காலை வேதா இல்லம் வந்தனர். சசகலாவின் அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் வருமான வரித் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் வீட்டை அளவிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வின்போது சீல் வைக்கப்பட்டிருந்த 2 அறைகளும் திறக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் அறைகளை ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு அறைகளுமே சசிகலா பயன்படுத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியபோது ஏராளமான கட்சித் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, இம்முறை பாதுகாப்புப் பணிகளுக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கும் தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

301 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன