
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்ற ரஜினியின் பேச்சால் அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..!
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்துவரும் ரஜினி அரசியல் அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவரோ, தன் நடிப்பில் உருவாகும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு முன்பாக சிறிது நேரம் ரசிகர்களிடையே உரையாற்றுகிறார். அரசியல், பொதுவாழ்க்கை குறித்தே அவரது பேச்சு அமைந்திருந்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று அவரது பேச்சு தனது திரையுலக வாழ்க்கையை பற்றியே அமைந்திருந்தது.

“என் நடிப்புத் திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தது என் நண்பன் ராஜ்பகதூர். 1973இல் முதல் முறையாக சென்னை வந்தேன். 1960களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். சென்னை எனக்கு எப்போதும் மெட்ராஸ்தான்.
தமிழ் சினிமாவிற்கு வந்தபோது எனக்குத் தமிழ் தெரியாது. இயக்குனர் பாலச்சந்தர் என்னிடம், ‘நீ தமிழைக் கற்றுக்கொள், உன்னை எங்கு கொண்டுசெல்கிறேன் பார்’ என சொன்னார். தனது மகன்களுடன் சேர்த்து என்னையும் மகனாகப் பார்த்தவர் பாலச்சந்தர். சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்கள் என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கினார்கள். இயக்குநர் ஷங்கர், இந்தியாவிற்கே ரஜினிகாந்தைத் தெரியும்படி செய்தார்” என தான் பணியாற்றிய இயக்குநர்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
அடுத்து ரசிகர்களை பற்றி பேசிய அவர், “எல்லாவற்றிற்கும் மேலாக என் வளர்ச்சிக்குக் காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான். இப்போது என்னுடைய கலை வாழ்க்கை 2.0வில் வந்து நிற்கிறது. கனவு காணும்போது இருக்கும் சந்தோஷம், அது நனவாகப் போகும்போது இருக்காது. நாம் கண்ட கனவு நனவாகவில்லை என்றால் வருத்தப்படத் தேவையில்லை. அதற்காகக் கனவு காண வேண்டாம் என்று கூறவில்லை. கனவு காண வேண்டும். ஆனால், அதை நியாயமான வழியில் நனவாக்க வேண்டும். குறுக்கு வழியில் நமது கனவுகளை நனவாக்க முயற்சிக்கக் கூடாது. நேர்மையான வழியில் லட்சியங்களை அடைய வேண்டும்” என்று கூறினார்.

2.0 படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பட வேலைகள் முடியாமல் தள்ளிப்போயின. ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது. இந்நிலையில், ‘2.O’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என ரஜினி அறிவித்துள்ளார்.
காலா படம் பற்றிப் பேசிய ரஜினி, “காலா படத்தில் வித்தியாசமான ரஜினிகாந்தை இயக்குநர் ரஞ்சித் காண்பித்துள்ளார். காலாவிற்குப் பிறகு என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
