புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

எலி-ஆமை கூடா நட்பு கேடாய் விளையும் குட்டிக்கதை கூறிய முதல்வர் பழனிசாமி..!

எலி-ஆமை கூடா நட்பு கேடாய் விளையும் குட்டிக்கதை கூறிய முதல்வர் பழனிசாமி..!

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூடா நட்பு குறித்து குட்டிக்கதை கூறி தினகரனை மறைமுகமாக விமர்சித்தார்.

முதல்வர் பழனிசாமி கூறிய குட்டிக்கதை:
”ஒரு ஏரிக்கரையில் எலியும், ஆமையும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஆமை, ஏரி நீருக்குள் மூழ்கி சில மணி நேரங்கள் நீந்திவிட்டு கரைக்கு வரும். இதை கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் எலிக்கு தானும் ஆமையைப்போல் நீருக்குள் மூழ்கி நீந்த வேண்டுமென்று ஆசை வந்தது.
ஒரு நாள் எலி தன் ஆசையை தனது நண்பனான ஆமையிடம் சொன்னது. ‘நீ – நீருக்குள் மூழ்கினால் நீந்தத் தெரியாது. எனவே, நான் நீரில் நீந்தும்போது நீ எனது முதுகில் உட்கார்ந்து கொள். உன்னை நீருக்குள் கொண்டு சென்று சுற்றிக் காட்டுகிறேன்’ என்று ஆமை சொன்னது.
அதன்படியே ஒரு நாள் ஆமை ஒரு கயிற்றின் ஒரு முனையை எலியின் காலிலும், மறுமுனையை தன் காலிலும் கட்டியது.’ஏன் இப்படி கட்டுகிறாய்?’ என்று எலி கேட்டது.
‘ஒரு தற்காப்புக்குத்தான், நான் நீந்தும்போது நீ நீரில் விழுந்தாலும் உன்னை நான் காப்பாற்றுவதற்கு எளிதாக இருக்குமல்லவா? – அதற்காகத்தான்’.
‘நாம் நீருக்குள் நீந்தும் போது, உனக்கு மூச்சு முட்டினால், என் கழுத்தைத் தட்டு, நான் நீருக்கு வெளியே வந்து விடுவேன்.மூச்சு விட்டுக்கொண்ட பிறகு மீண்டும் நீருக்குள் போய் நீந்தலாம்’ என்று ஆமை கூறியது.


ஆமையின் அறிவையும், அன்பையும் கண்டு எலி மகிழ்ச்சியடைந்தது. ஆமை, எலியை முதுகில் ஏற்றிக்கொண்டு நீருக்குள் மூழ்கி நீந்த ஆரம்பித்தது. எலிக்கு மூச்சு திணறும்போது ஆமையின் கழுத்தைத் தட்டவே, ஆமை நீருக்கு வெளியே வந்தது. இப்படியே இரண்டும் வெகுநேரம் நீருக்குள் போவதும் வெளியே வருவதுமாக இருந்தன.

இதை வானத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்த ஒரு கழுகு பார்த்து, அவற்றை இரையாக்கிக் கொள்ள நினைத்தது. கழுகு வானத்திலிருந்து தங்களைப் பார்ப்பதை ஆமை கவனித்து விட்டது. எனவே, முதுகில் எலி இருப்பதைக்கூட மறந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீருக்குள் மூழ்கி மிகவும் ஆழத்திற்குச் சென்றது. எனவே, எலி மூச்சுத்திணறி இறந்து போனது. இறந்த பின் எலி நீருக்கு வெளியே வந்து மிதந்தது. இதைப் பார்த்த கழுகு, எலியை கொத்தித் தூக்கிக்கொண்டு பறந்தது.


எலி, ஆமையுடன் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால், எலியுடன் ஆமையையும் தூக்கிக்கொண்டு கழுகு பக்கத்திலிருந்த மலைக்குள் சென்று அந்த இரண்டையும் இரையாக்கிக் கொண்டது.அப்போது, உயிர் போகும் தருவாயில் ஆமை கழுகிடம் சொன்னது: ‘கழுகே, நாங்கள் கூடா நட்புக் கொண்டிருந்ததால் எங்களுக்கு இந்த ஆபத்து வந்தது. கூடா நட்பு கேடாய் விளையும் என்ற பழமொழிக்கு நாங்கள் தான் உதாரணம்’ என்று அழுதபடியே உயிரை விட்டது.


பலர் அதிமுகவின் கொள்கையை மறந்து, எதிரிகளுடன் கூடா நட்பு கொண்டு, தனியாக சாதித்துவிட்டதாக கருதி, பேசி திரிந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் நட்பு தங்களுக்கே ஆபத்தானது என்பதை அவர்களுக்கு காலம் அவர்களுக்கு உணர வைக்கும். காலம் என்கிற கழுகு அவர்களை அழித்துவிடும்” என்றார் முதல்வர் பழனிசாமி.

298 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன