ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

தினகரன் ஒரு கிரிமினல் துரோகி உதகை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்..!

நீலகிரி மாவட்டம் உதகையில் குதிரைப்பந்தய மைதானத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில், எம்ஜிஆர் படத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

”நாம் ஒன்றை நினைத்துப் பார்க்கவேண்டும். நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தல். உலகத்தில் இருக்கின்ற எந்தவொரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வராத எண்ணம் கொண்ட ஒரு வித்தியாசமான தேர்தல்தான் இந்த ஆர்.கே.நகர் தேர்தல். ஆகவே, இதற்கு முன்பு திருமங்கலம் ஃபார்முலா என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை மிஞ்சி, இப்பொழுது ஆர்.கே.நகர் ஃபார்முலா என்ற ஒரு ஃபார்முலாவைக் கண்டுபிடித்து தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றிருக்கின்றார்.

அந்த ஃபார்முலா ஹவாலா ஃபார்முலா. இதுவரைக்கும் யாரும் சிந்தித்ததுகூடக் கிடையாது. எவ்வளவோ அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள், எவ்வளவோ சிந்தனையாளர்கள் இருக்கின்றார்கள். எவருடைய எண்ணத்திற்கும் எட்டாதது ஒரு நபருக்கு எட்டியது என்று சொன்னால், அவர் எப்படிப்பட்ட கிரிமினலாக இருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஹவாலா ஃபார்முலா மூலம் வெற்றி பெற்று, எங்களை துரோகி என்று சொல்கின்றார். யார் துரோகி என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். ஆக, இப்படிப்பட்ட பார்முலாவைக் கொண்டு வந்தவர்தான் துரோகி என்பதை இந்த நேரத்திலே கோடிட்டுகாட்ட விழைகின்றேன்.

மக்களை நேரடியாக சந்தித்து, அதன் மூலமாக தினகரன் வெற்றி பெறவில்லை. இந்த நாட்டு மக்கள் அத்தனைபேருக்கும் தெரியும். ஆகவே, துரோகிகள் நாங்கள் அல்ல, நாங்கள் அத்தனைபேரும் உழைத்தவர்கள், உழைத்து முன்னுக்கு வந்தவர்கள்.

நாங்கள் துரோகிகள் இல்லை, உழைத்தவர்கள், மக்களால் போற்றப்படுகின்றவர்கள். துரோகி என்பது யார்? அவர்கள் தான். கொல்லைப்புறத்தின் வழியாக வந்து, இந்தக் கட்சியை அபகரிக்கப் பார்க்கின்றார்கள். இந்த ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கின்றார்கள். அதற்குத் தக்க பாடத்தை மக்களும் அதிமுக தொண்டர்களும் புகட்டுவார்கள்.

இந்த ஆட்சியையும், கட்சியையும் அழிக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர். அவரோடு துணைபோய்க் கொண்டிருக்கின்றார் இந்த டிடிவி தினகரன். இருவரும் கூட்டு சேர்ந்துதான் நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டார்கள். கதை என்னவானது, எங்களை வீழ்த்த வேண்டுமென்று நினைத்தார்கள், அவர்களை மக்கள் வீழ்த்திவிட்டார்கள். பத்து கட்சி ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்தும்கூட பெற்ற ஓட்டு சொற்ப ஓட்டு, டெபாசிட்கூட பெறமுடியவில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு ஒரு சான்று, தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டு இருக்கும் ஒரு செய்தி. அந்த அறிக்கையில், இந்தியாவிலுள்ள ஆறு மெட்ரோ நகரங்களில், பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த முதல் பெருநகரமாக இருப்பது தமிழ்நாட்டினுடைய சென்னை மாநகரமாக விளங்குகின்றது.

பதிவு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில் 25.7 சதவீதம், மும்பையில் 6.4 சதவீதம், கொல்கத்தாவில் 3.5 சதவீதம் உள்ளது. இதுவே சென்னையில் 2 சதவீதமாக உள்ளது. அதுபோலவே அகில இந்திய அளவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டு பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. ஆகவே, சட்டம், ஒழுங்கு எந்தளவிற்கு பேணிக்காக்கப்படுகின்றது என்பதற்கு இதுவே சான்று” என்று முதல்வர் பழனிசாமி பேசினார்

412 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன