
ரஜினிகாந்தின் கட்சி பெயர், கொடி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரையில் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா அழகர் கோவிலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினர்.
மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு தையல் எந்திரம், வேட்டி – சேலை, சில்வர் பானைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கள், மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார்.
