
ஒரு திருடனும் ஞாபக மறதி பாதிப்பில் உள்ள ஒருவரும் பயணிக்க நேர்ந்தால் என்ன ஆகும்… குறிப்பாக ஞாபகமறதி நபரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை திருடன் தெரிந்து கொண்டு அதை பறிக்க திட்டமிட்டு நல்லவன் போல நடித்தால் என்ன நடக்குமோ அதைதான் திருடனாக பகத்பாசிலும், ஞாபகமறதி நபராக வடிவேலுவும் நடித்திருக்கிறார்கள்.
ஆனால், வடிவேலுவோ பகத் பாசிலுடன் பயணித்தாலும், அவருக்கே தெரியாமல் மிகப்பெரிய வேலை செய்கிறார்.
அதோடு, இவர்கள் பயணிக்கும் ஊர்களில் சிலர் கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொன்றது யார் என தெரியாமல் போலீஸ் திணறுகிறது.
கொலைகளுக்கும், பகத் பாசிலுக்கும் என்ன தொடர்பு? வடிவேலு உண்மையில் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சுவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்ல முயற்சிக்கிறார்கள்.
ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலுவும், நல்லவன் போல் நடித்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடும் பகத் பாசிலும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
முதல் பாதி பைக் பயணத்தில் பேசிக் கொண்டே செல்வதால் கொஞ்சம் அயர்ச்சி ஏற்படுகிறது.
அதை இரண்டாம் பாதி பேலன்ஸ் செய்கிறது.
பாலியல் சீண்டல் எல்லா இடங்களிலும் குறிப்பாக கல்வித்துறையில் எப்படி எல்லாம் புகுந்துள்ளது என்பதை மிக நாசுக்காக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுதீஷ்.
ஒரு ‘ரோட் டிரிப்’ ஆக நகரும்படத்தில், கலைச்செல்வன் சிவாஜி தனது ஒளிப்பதிவின் வழியாக கதாபாத்திரங்களை காட்சிப்படுத்தி, யுவன் சங்கர் ராஜாவின் இசை மூலம் உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்.
வெளித்தோற்றத்தைக் கொண்டு எந்தவொரு மனிதரையும் எடைபோட்டு விடமுடியாது; ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மாயமான் போல வாழும் மற்றொரு மாரீசன் உண்டு என்பதை கிருஷ்ண மூர்த்தியின் திரைக்கதை வழியே ‘எமோஷனல் த்ரில்ல’ராக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுதீஷ் குமார்.
கோடங்கி
3/5
