வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31
Shadow

“ரைட்” கோடங்கி விமர்சனம் 2.5/5

 

 

போலீஸ் – அரசியல் அதிகார மையம் இவை இரண்டுக்கும் நடுவே மிரட்டல்வகை கதை சொல்ல முயற்சிக்கும் படம் தான் ரைட்…

தலைப்புக்கு ஏத்த மாதிரி ரைட்டா … போகுமா படம் இல்ல ராங்கா ஆகிடுமா?

கதைப்படி சென்னை அருகிலுள்ள கோவளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நட்டி, ஒரு அமைச்சர் மகனின் நண்பர்களை கைது செய்து உள்ளே அடைக்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி அவர் ரோந்து சென்றிருக்கும் நேரத்தில், அமைச்சர் மகன் தன்னுடைய ஆட்களை காவல் நிலையத்திலிருந்து அழைத்து செல்கிறான். அதற்குள், “காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என்ற மிரட்டல் தொலைபேசி அழைப்பு வருகிறது.

இந்நிலையில், காவல் நிலையத்துக்குள் சிக்கிக் கொள்ளும் எழுத்தர் மூணார் ரமேஷ், துணை ஆய்வாளராக வரும் கதாநாயகி அக்ஷரா ரெட்டி, தன்னுடைய மகன் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண் பாண்டியன், சில காவலர்கள், மேலும் இரண்டு கைதிகள் – இவர்கள் அனைவரும் உயிரோடு தப்பித்தார்களா? வெடிகுண்டு வைத்தது யார்? அருண் பாண்டியன் மகன் எங்கே? கைது செய்யப்பட்டவர்களை அழைத்து சென்ற அமைச்சர் மகனுக்கு என்ன ஆனது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக கதை நகர்கிறது.

க்ரைம் திரில்லர் வகையை சேர்ந்த கதையாக சுவாரஸ்யமாக தொடங்கி கொஞ்ச நேரத்தில் திரைக்கதை மற்றும் இயக்கம் எங்கெங்கோ போகிறது.

அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் ரைட் பேசப்பட்டிருக்கும்.

இன்ஸ்பெக்டர் நட்டி கதாபாத்திரம் சிறப்பு தோற்றம் போல் தோன்றுகிறது. காரணம் முதல் பாதியில் மூன்று அல்லது நான்கு காட்சிகளில் மட்டுமே வருகிறார். இரண்டாம் பாதியில் குறைவான காட்சிகளில் மட்டுமே வருவதாலும், அவர் ரோலுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லாதது போல இருப்பதாலும் அப்படி தோன்றுகிறதோ.

அழகான அக்ஷரா ரெட்டி இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.அருண் பாண்டியனின் ரோல் மிகப் பெரிய மைனஸ்.

மூணார் ரமேஷ் எப்போதும் இயல்பாக நடிப்பார். ஆனால் இங்கு சில காட்சிகளில் அவர் நடிக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

நீதிபதியாக நடித்துள்ள வினோதினி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்தாலும், காட்சிகள் முரணாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை.

கைதியாக நடித்துள்ள தங்கதுரை மட்டுமே கொஞ்சம் ஆறுதல் தருவதோடு சிரிக்க வைக்கிறார்.

அமைச்சர் மகனாக நடித்த இளைஞர், காதலர்களாக வரும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யூவினா பார்தவி – இவர்களின் நடிப்பும் சுமார் ரகமே.

இசை, ஒளிப்பதிவும் குறிப்பிடும்படியான எதுவும் இல்லை.

மொத்தத்தில், சுவாரஸ்யமாக இருக்க வேண்டிய “ரைட்” பலமில்லாத திரைக்கதை மேக்கிங்கால் ராங்காக தெரிவதால் மனசில் நிற்கவில்லை.

கோடங்கி
2.5/5

62 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன