
கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்க அதனுடன் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃப்ரோ மூவி ஸ்டேஷன் சார்பில் கார்த்திகேயன் எஸ். ஃப்ரோஸ் ரஹீம், அஞ்சாய் சாமுவேல் தயாரித்துள்ள இப்படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார். பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கீதா கைலாசம், இந்த படத்தில் அம்மாவாக நடித்திருந்தாலும், கதையின் நாயகியாக மாறுபட்ட வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”எனக்கு தாய்மொழி மலையாளம் ஆக இருந்தாலும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கதைகள், சிறுகதைகளை நான் மலையாளத்தில் படித்திருக்கிறேன். அதில் கோடித் துணி என்ற சிறுகதை மனதில் பதிய அதைத் திரைப்படமாக்கி, கிராமத்து கலாச்சாரத்தை திரைப்படம் மூலமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
சத்தியமங்கலம், களக்காடு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம். அதற்கு முன் அந்த ஊர் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள நானும் பட குழுவை சேர்ந்த சிலரும் நேராக அந்த கிராமத்திற்கு சென்று சுமார் நான்கு மாதம் வீடு எடுத்து தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி அவர்களது வாழ்வியலை அறிந்து கொண்டு அதன் பின் படமாக்கி இருக்கிறோம்.
இந்தப்படம் ஏற்கனவே ஃபோக்கஸ் சவுத் ஏசியா உள்பட 3 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது. பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் இந்த படத்தை ரசித்து பாராட்டினார்கள்.” என்றார்.
