
கர்நாடக அரசு இந்துக்களுக்கு எதிரானது என பா.ஜனதா தலைவர் அமித் ஷா பேசியதற்கு நேற்று பதிலடி கொடுத்த முதல் மந்திரி சித்தராமையா, பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஆகியவை தீவிரவாத இயக்கங்களையே வளர்க்கிறது என்றார்.
“யாரும் அமைதியை சீர்குலைப்பதை காங்கிரஸ் அரசு பொறுத்துக் கொள்ளாது. அது எஸ்டிபிஐ ஆக இருக்கட்டும், பஜ்ரங்தள் அமைப்பாக இருக்கட்டும், வேறு எந்தஒரு அமைப்பாகவும் இருக்கட்டும் ஒருபோதும் அரசு சகித்துக் கொள்ளாது என்றார் சித்தராமையா.
சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இந்துக்களை பயங்கரவாதி என்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டது, இதற்கிடையே பயங்கரவாதிகள் என கூறிய சித்தராமையாவை கண்டித்து கர்நாடகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பா.ஜனதா கூறிஉள்ளது.
இவ்விவகாரம் சர்ச்சையாகிய நிலையில் சித்தராமையா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாட்டில் பா.ஜனதாவினர், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள அமைப்பினர் மட்டும் தான் இந்துகளா?. நாங்களும் இந்துக்கள் தான். இந்துத்துவா என்பது மனதில் இருந்து வர வேண்டும்.
மற்றவர்களை துன்புறுத்தி, மிரட்டி, வன்முறை மற்றும் கலவரங்களை உருவாக்கி வலுக்கட்டாயமாக இந்துத்துவாவை திணிக்கக் கூடாது. தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, உடுப்பி ஆகிய இடங்களில் பா.ஜனதாவினர் இந்து மதத்தை சேர்ந்தவர்களை கொலை செய்துவிட்டு, அந்த பழியை மற்ற மதத்தினர் மீது சுமத்தி, கலவரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதுவும் ஒரு வகையில், இந்துத்துவா தீவிரவாதம் அல்லவா?. நாட்டில் இருக்கும் அனைத்து இந்துக்களும் பயங்கரவாதிகள் என்று நான் கூறவில்லை. நாட்டில் இந்துமத பெயரில் வன்முறையை தூண்டிவிட்டு கொண்டிருக்கும் பா.ஜனதாவினர் தான் இந்துத்துவா பயங்கரவாதிகள்.
நான் கூறியதை தவறாக புரிந்துகொண்டு என்னை குற்றம்சாட்டி வருகிறார்கள்,” என்று காட்டமாக பதில் அளித்தார்.
கர்நாடகத்தில் மத உணர்வுகளை தூண்டிவிட்டு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா சதி செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டிஉள்ளது.
