ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

திரெளபதி 2 கதை குறித்து இப்போது சொன்னால் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் இயக்குனர் மோகன் ஜி!

 

2020 ஆம் ஆண்டு வெளியான படம் திரெளபதி. ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார்.இப்போது, திரெளபதி படத்தின் தொடர்ச்சியாக திரெளபதி 2 படத்தை மோகன்.ஜி இயக்கியிருக்கிறார்.

ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்‌ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார்.இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சிராக் ஜானி, தினேஷ் லம்பா, சரவண சுப்பையா, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜி.எம் பிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குநர் மோகன்.ஜி பேசியதாவது:

திரெளபதி படத்தின் தொடர்ச்சிதான் திரெளபதி 2. முதல்பாகத்தின் நாயகன் பற்றிய கதைதான் இரண்டாம் பாகம். அது எப்படி 14 ஆம் நூற்றாண்டுக்குச் செல்கிறது? என்கிற கேள்விக்கான விடை படத்தில் இருக்கிறது.
இப்படத்தில், மூன்றாம் வீர வல்லாள மகாராஜா பற்றிச் சொல்லியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க வரலாற்று உண்மை. அன்னல்கண்டா என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய வரலாற்றுப் புத்தகத்தை மையமாக வைத்துத்தான் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறோம். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்கள்தாம்.அவற்றோடு சில கற்பனைகளும் கலந்திருக்கின்றன.இப்படி நடந்திருந்தால் எப்படியிருக்கும்? என்கிற அடிப்படையில் அந்தக் கற்பனைகள் இருக்கும்.

நமக்கு சேர சோழ பாண்டியர்கள் பற்றித் தெரியும்.அவர்களுக்குப் பிறகு தென்னிந்தியா முழுவதையும் ஆண்டவர்கள் ஒய்சாலர்கள். கர்நாடகாவைத் தலைமையாகக் கொண்டு தென்னிந்தியா முழுவதுமிருந்த 80 பாளையங்களை ஆண்டார்கள். அதில் ஒரு பாளையத்தை வல்லாள மகாராஜாக்கள் ஆண்டார்கள். குறிப்பாக மூன்றாம் வல்லாள மகாராஜா திருவண்ணாமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். இப்போதும் திருவண்ணாமலை கோவிலில் கிளி கோபுரம் ஒன்று இருக்கிறது, அவருக்குச் சிலை இருக்கிறது. அங்கு அவருக்கு வருடம் வருடம் விழா நடக்கும், அதில் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வல்லாள மகராஜாவுக்குக் கீழ் ஆட்சி செய்தவர்கள் காடவராயர்கள்.அவர்கள் விழுப்புரத்தை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. அவர்களைப் பற்றியதுதான் இந்தப்படம்.

நாயகன் ரிச்சர்ட் வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நட்டி நட்ராஜ் மூன்றாம் வல்லாள மகராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சம்புராயர்கள் குறித்தும் படத்தில் இருக்கிறது. சம்புராயர் வேடத்தில் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார்.

இந்தக் கதைக்காக பல ஆய்வுகளை மேற்கொண்டேன். பல வரலாற்று ஆசிரியர்களைச் சந்தித்து, அவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், பல ஆதாரங்கள் அடிப்படையிலும் சுமார் ஒரு வருடமாகத் திரைக்கதை எழுதினேன். இதுவரை சொல்லப்படாத மற்றும் மக்கள் அறிந்திராத வரலாற்றைப் பேசும்படமாக இது இருக்கும்.

பல்லவர்கள் ஆட்சியின் வரலாற்றைச் சொல்லும் ஒரு படைப்பாக இருக்கும். அப்போது சுல்தான்கள் இங்கு வந்து என்ன செய்தார்கள்? அவர்கள் படையெடுப்பின் நோக்கம் என்னவாக இருந்தது? அவர்களைக் காடவராயர்கள் எதற்காக எதிர்த்தார்கள்? எப்படி எதிர்கொண்டார்கள்? ஆகிய கேள்விகளுக்கான விடையாக படம் இருக்கும்.

இந்தக் கதையைப் படமாக எடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன? என்பதை இப்போது சொன்னால் படம் குறித்து தேவையில்லாத சர்ச்சைகள் எழும்.

இந்நிலையில், இயக்குநர் மோகன்.ஜி, தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் ஒளிப்பதிவாளர் பிலிம் ராஜ் சுந்தர் ஆகியோர் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது….

தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி பேசியதாவது:  எங்கள் சக்திக்கு மீறிய பட்ஜெட்டில் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறேன். இயக்குநர் மோகன் ஜி மற்றும் அவரது குழுவின் கடுமையான உழைப்பால் 31 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறுவதோடு, தமிழ்த் திரையுலகில் முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர் பேசியதாவது:

படம் முழுவதும் இரண்டு கேமராக்களை கொண்டு படமாக்கினோம். போர்க் காட்சிகளில் மூன்று கேமராக்கள் இருக்கும். படத்தில் ஏழு சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. வரலாற்றுக் கதையாக இருந்தாலும், பீரியட் கலர் டோன் பயன்படுத்தாமல், பலவித வண்ணங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். அதனால், ஒரு விளம்பரப் படத்தைப் பார்க்கும் அனுபவத்தைப் இப்படம் கொடுக்கும் என்றார்.

 

96 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன