திங்கட்கிழமை, மே 25
Shadow

அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு திறக்கும் வாடிவாசல்..!

அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு திறக்கும் வாடிவாசல்..!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள், காளைகள் பதிவு நடைபெற்றது. இன்று காலையுடன் அது நிறைவு பெற்றது. தற்போது காளைகள் சோதனை செய்யப்பட்டு போட்டிக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பயிற்சி, காளைகளை அடக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி என மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை களை கட்டியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு 1000-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய தயாராகி வருகிறது. 1200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.


காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்களுக்கான கேலரி, அடிப்படை வசதிகள் ஆகியவை விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகிறது.
அவனியாபுரத்தில் நாளை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. இதற்காக குருநாதசுவாமி கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் போட்டியை பார்ப்பதற்காக அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு மாடு பிடி வீரர்கள், காளைகள், பொதுமக்கள் எந்த தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்தனர்.
போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மது குடித்து வருவோர், ஆவணங்கள் இல்லாதோர், உடல் தகுதி இல்லாதோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அதிகாரிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு தங்க காசு, தங்க சங்கிலி, பீரோ, கட்டில், சைக்கிள், பாத்திரங்கள் மற்றும் பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டையொட்டி அவனியாபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஆம்புலன்சு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

381 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன