அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 16ம் தேதி தொடங்கி வைக்கிறார்
பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றவை.

அவனியாபுரத்தில் நாளையும் (14-ந்தேதி), பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைக்கிறார்கள். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14-ந்தேதி சேலத்தில் பொங்கல் விழாவை கொண்டாடி விட்டு அங்கிருந்து 15-ந் தேதி மாலை காரில் மதுரை வருகிறார்.

மதுரை அரசு சுற்றுலா விடுதியில் தங்கும் எடப்பாடி பழனிசாமி 16-ந்தேதி காலை அலங்காநல்லூர் புறப்பட்டுச் செல்கிறார். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.

இதையொட்டி அலங்காநல்லூர் வாடிவாசலில் இருந்து ஊர் எல்லை வரை 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அலங்காநல்லூருக்கு முதல்வர் வருவதையொட்டி சாலைகள் சீரமைக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கலெக்டர் ராவ் இன்று ஆய்வு செய்தனர்.
