வியாழக்கிழமை, மே 28
Shadow

கொள்ளையன் நாதுராமை பிடிக்க சினிமா பாணியில் துப்பாக்கி சூடு, கார் சேஸிங்,13 கிலோமீட்டர் துரத்தல்..!

சினிமா பாணியில் துப்பாக்கி சூடு, கார் சேஸிங்,13 கிலோமீட்டர் துரத்தல்..!
ஒருவழியாக சிக்கிய கொள்ளையன் நாதுராம்

சென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது. மேற்கூரையில் துளையிட்டுத் திருடப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு வடமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கூட்டாளிகளான நாதுராம் மற்றும் தினேஷ் சௌத்ரி எப்படியோ ராஜஸ்தானுக்குத் தப்பிச் சென்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக பெரிய பாண்டியன், முனிசேகர் தலைமையில் ஆறு பேர் கொண்ட தனிப்படை கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ராஜஸ்தான் சென்றது. அங்கு கொள்ளையர் களைக் கண்டறிந்து நெருங்கும்போது இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் முதலில் இந்தக் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம் தான் சுட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பின்பு, பெரியபாண்டியின் உடலில் பாய்ந்த குண்டு உடன் சென்றிருந்த இன்ஸ்பெக்டர் முனிசேகருடையது என்று ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்ட எஸ்பி தீபக் பார்கவ் கூறியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக முனிசேகர், பெரியபாண்டியனின் குடும்பத்தாரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டார். ஆனாலும், பெரியபாண்டியன் மரணம் தொடர்பான மர்மம் இன்னும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான நாதுராம் கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் தன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் படத்தை போட்டது பரபரப்பைக் கிளப்பி விட்டது. நாதுராம் ஜாட் என்ற பெயரில் முகநூலில் கணக்கு வைத்துள்ள நாதுராம், தனது தொழிலாக கிரிமினல் செட்டில்மென்ட் என்று கட்டப்பஞ்சாயத்தையும் ஒரு தொழிலாக குறிப்பிட்டுள்ளான். இது ராஜஸ்தான் போலீஸாரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. உடனடியாக சைபர் பிரிவு போலீஸார் நாதுராமின் செல்போன் டவரை தீவிரமாக கண்காணிக்க துவங்கினர்.

போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் நாதுராம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பதுங்கி இருந்ததை செல்போன் டவர் மூலம் ராஜஸ்தான் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் நாதுராமின் நடமாட்டத்தை அங்குலம் அங்குலமாக கண்காணித்த ராஜஸ்தான் போலீஸார், பாலி எஸ்பி தீபக் பார்கவ் தலைமையில் குஜ்ராத் மாநிலத்துக்கு சென்றனர். ராஜ்கோட்டுக்கு சென்ற போலீஸார் அவனை நெருங்கும் போது நாதுராம் தன் கையில் இருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு, காரில் ஏறி தப்பிச்சென்றான்.

இதையடுத்து நாதுராமின் காரை போலீஸார் துரத்திச் சென்றனர். காரை தொடர்ந்து சென்ற போலீஸார் காரை நோக்கி 3 ரவுண்டு சுட்டனர். இதனால் காரின் டயர் பஞ்சராகி நின்றது. கார் டயர் பஞ்சர் ஆனதால் காரைவிட்டு கீழே இறங்கி நாதுராம் ஓட ஆரம்பித்துள்ளான், போலீஸாரும் பின்னால் விரட்டிச் சென்றனர். பாட்கோத்ரா என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடி அருகே மேற்கொண்டு ஓட முடியாமல் நாதுராம் தயங்கி நிற்க நாதுராம் மற்றும் உடனிருந்த கூட்டாளி சுரேஷ் மேகுவால் இருவரையும் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

இந்த நாதுராமை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு நாதுராமை விரட்டிச் சென்றனர். சினிமாவில் வருவது போல் துப்பாக்கி சூடு கார் சேஸிங், பின்னர் துரத்தி பிடித்தல் என 13 கிலோ மீட்டர் தூரம் நாதுராம் போக்கு காட்டியுள்ளான்.

மேலும் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்ட பிறகு பாலி மாவட்டத்தில் இருந்து தப்பி தலைமறைவாக இருந்த நாதுராம் 33 முறை தனது இருப்பிடங்களை மாற்றியுள்ளார் என ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது ராஜஸ்தான் போலீஸாரையே துப்பாக்கியை காட்டி, சுட்டுவிட்டு தப்பிச்சென்ற நாதுராம் நள்ளிரவில் ஏன் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுட்டுவிட்டு தப்பியிருக்க கூடாது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது கூடுதல் தகவல்.

காரணம் இறந்த இன்ஸ்பெக்டரின் உடலில் குண்டுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதாலும், கொள்ளையன் நாதுராம் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி போலீசாரை சுட்டு தப்பிக்க முயன்றதாலும் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.

363 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன