வியாழக்கிழமை, மே 28
Shadow

கமலை ஒதுக்கி ரஜினியை வரவேற்கும் குருமூர்த்தி..! உடையும் ஆன்மீக அரசியல் ரகசியம்

கமலை ஒதுக்கி ரஜினியை வரவேற்கும் குருமூர்த்தி..!
உடையும் ஆன்மீக அரசியல் ரகசியம்

ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னாலும் சொன்னார் ஷெட்டில் தூசி படிந்து கிடக்கும் வண்டிகளும், ரிப்பேர் ஆகி ஓரம் கட்டப்பட்ட வண்டிகளும் அவரச கதியில் பிரசாரத்துக்கு ரெடியாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் ரஜினியோ தனிக்கட்சி, அதிலும் ஆன்மீக அரசியல் என்று பொடி வைத்து பேசியிருக்கிறார். தமிழகம் மதசார்பற்ற மாநிலம் என்ற நிலையில் ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடுமா என்ற விவாதம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் பிஜேபியின் ஆதரவோடுதான் ரஜினி ஆன்மீக அரசியல் நிலைப்பாடு எடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் இல்லாமல் இல்லை.
அதை மெய்ப்பிக்கும் விதமாக ரஜினியின் பாபா முத்திரையில் பாஜவின் தாமரை சின்னம் முன்பாகவும், அதற்கு பின்னால் பாபா முத்திரையும் இருந்தது.

வெளிப்படையாக விமர்சனங்கள் எழுந்த்தும் பாபா முத்திரையில் இருந்து தாமரையை நீக்கினார் ரஜினி.
அப்படியிருந்தும் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும் பாஜக இருக்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மனசில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இதை உறுதிபடுத்தும் விதமாக பாஜகவின் தமிழக ஆலோசகராக கருதப்படும் குருமூர்த்தி விரைவில் ரஜினி பாஜகவோடு இணைந்து செயல்படுவார் அப்படி செயல்பட்டால்தான் புரட்சியை ஏற்படுத்த முடியும் என கூறியிருக்கிறார்.


வார இதழ் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய போது, “மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை. அதனால், திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது. அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது.

இந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட டி.என்.ஏ வில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்துள்ளனர். ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 12-ல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், குழாயடி சண்டை போல் இருந்தது.
ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறியது, கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது, பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். கமலின் அரசியல் வருகை கழகங்களின் தொடர்ச்சியாகவே இருக்கும்” என்று பேசினார்.

இது எப்படி இருக்கிறது என்றால் விஜய் நடித்த போக்கிரி படத்தில் வடிவேலு விஜயை பின்தொடர்வதற்காக பல கெட்டப் போட்டு வந்தாலும் மாட்டிக் கொள்வார்… எல்லாத்தையும் மாத்தினியே கொண்டையை மறைச்சியா என கேட்டு அடி பின்னுவார்கள்… அப்படி எந்த ரூபத்தில் மதவாத ஆன்மீக அரசியலை யார் மூலமாக தமிழகத்தில் பிஜேபி திணிக்கப் பார்த்தாலும் தமிழக மக்கள் அந்த “கொண்டை”யை சரியாக அடையாளம் கண்டு வெளுத்து வாங்குவார்கள்.

443 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன