
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப்படம்..!
‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர்.ரவிக்குமார், தன்னுடைய முதல் படத்திலேயே ‘டைம் மிஷின் கான்செப்ட்’டை மையமாக வைத்துப் படமாக்கி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.
அந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்ட நிலையில், தற்போது ரவிகுமாரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படம் முடிவடைந்ததும் ரவிகுமார் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 5வது படைப்பாக உருவாகும் இப்படம் அறிவியல் சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்படவிருக்கிறதாம். பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கும் இப்படம் 2019ஆம் ஆண்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஏவிஎம் நிறுவனம் தான் படம் தொடங்கும் நாளில் ரிலீஸ் தேதியும் அறிவிப்பார்கள் அந்த வரிசையில் பட அறிவிப்பின் போதே பட ரிலீஸ் விவரத்தையும் 24ஏஎம் ஸ்டுடியோ அறிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
