
பிரபல ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீனின் (வயது 65) திரைமறைவு வாழ்க்கையின் மர்மங்கள் பற்றி ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு தொடர்ந்து செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல பெண்கள், அவர் மீது பாலியல் புகார்களை அடுக்கினர்.
இந்த நிலையில் அவரிடம் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் அவர் மீது பாலியல் புகார் எழுப்பி உள்ளார்.
2013-15ம் ஆண்டுகளில் ஹார்வி வெயின்ஸ்டீனிடம் பணியாற்றிய இவர், நியூயார்க் தென்மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். 11 பக்கங்கள் கொண்ட புகார் மனுவில் அவர், வெயின்ஸ்டீனின் நிறுவனத்தில் தான் பணியாற்றியபோது கடுமையான பாலியல் தொல்லை சூழலில் பணிபுரிய வேண்டியது இருந்ததாகவும், முடிவில்லா பாலியல் தாக்குதல்களுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், வீட்டுப்பணியாளர்கள் தங்கள் வேலையை செய்ய வருவதற்கு முன்பாக வெயின்ஸ்டீன் பயன்படுத்திய ஆணுறைகளை அப்புறப்படுத்தி, அறைகளை சுத்தப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறி உள்ளார்.
காரில் பயணிக்கும்போது அவருடன் பின் இருக்கையில் இருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அப்போது அவர் பாலியல் தொல்லை தந்தபடியே இருந்ததாகவும் தெரிவித்து உள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, 21 நாட்களுக்குள் வழக்கு பற்றி பதில் அளிக்குமாறு வெயின்ஸ்டீனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

முன்னாள் உலக அழகியும் இந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராய் ஒரு படத்தில் நடிக்கும் போது அவருக்கும் ஹார்வி இப்படி பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஜேன் டோ என்ற நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். மார்கோ போலோ டிவி சீரியலில் வாய்ப்பு கேட்டு ஹோட்டலுக்கு வந்த ஜேனை பலாத்காரம் செய்துள்ளார் என்று புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜேனுக்கு அந்த சீரியலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லையாம். இந்நிலையில் ஜேன் தற்போது வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
