சனிக்கிழமை, மே 30
Shadow

மே மாதம் தள்ளிப்போகிறது ரஜினியின் ‘2.0’?

ரஜினிகாந்த் நடித்து 2010-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஷங்கர் டைரக்டு செய்துள்ளார்.
ரூ.450 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்தியாவில் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய செலவில் எடுக்கப்பட்டது இல்லை. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில்  ரிலீசாகிறது. இதன் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக நடந்து சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. கடந்த அக்டோபர் மாதம் துபாயில் பிரமாண்ட விழா நடத்தி பாடல்களை வெளியிட்டனர்.
படம் எப்படி உருவானது என்று 1 நிமிடம் 48 நொடிகள் ஓடக்கூடிய தயாரிப்பு வீடியோவும் இணையதளங்களில் பரவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்ட விதம், ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் தோற்றங்களை உருவாக்கியது. சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் போன்றவை இடம்பெற்று இருந்தன.
ஏற்கனவே இரண்டு முறை படம் வெளியாகும் தேதியை அறிவித்து தள்ளி வைத்து விட்டனர். கடந்த தீபாவளிக்கு படம் வெளி வரும் என்றனர். பின்னர் ஜனவரி 26-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதன்பிறகு ஏப்ரல் 27-ந்தேதிக்கு தள்ளிப்போனது.
தற்போது அந்த தேதியில் திட்டமிட்டபடி படம் வருமா? என்பதிலும் கேள்வி எழுந்துள்ளது. குடியரசு தினத்தன்று படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்து இருந்தனர். ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை என்றும் எனவே படம் வெளியாகும் தேதி மே மாதம் தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.
கிராபிக்ஸ் பணிகளால் தாமதமாவதை இயக்குனர் ஷங்கரும் உறுதிபடுத்தி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படத்தின் டிரெய்லர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கிராபிக்ஸ் பணிகளுக்காக அதிக வேலை தேவைப்படுகிறது. டீசர் தயாரானதும் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.
கிராபிக்ஸ் எப்போது முடியும் என்ற அவர் தெரிவிக்கவில்லை. 2.0 படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகிறது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் ஹாலிவுட் ஸ்டூடியோக்களில் இரவு பகலாக பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் முடிய தாமதமாகும் என்று தெரிகிறது. எனவே படம் மே மாதம் வெளியாகவே வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.
கிராபிக்ஸ் பணிகள் முன்கூட்டியே முடிந்துவிட்டால் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் திரைக்கு வரும்.
402 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன