
கமலின் புதிய கட்சியில் இணைந்து பணியாற்றுவதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரியான மவுரியா கமல் கட்சியில் சேர்ந்துள்ளார். மயிலாப்பூரில் துணை கமிஷனராக பணியாற்றிய இவர் கடைசியாக சிறைத் துறையில் ஐ.ஜி.யாக இருந்தார். பணிக்காலம் முடியும் முன்னரே, விருப்ப ஓய்வு பெற்று சென்று விட்டார்.
சென்னை கானாத்தூரில் வசித்து வருகிறார். கமல் கட்சியில் சேர்ந்தது பற்றி போலீஸ் அதிகாரி மவுரியா அளித்த பேட்டி வருமாறு:-
கே:- போலீஸ் அதிகாரியாக இருந்த உங்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
ப:- போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய காலங்களிலேயே அரசியலை கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். அரசியலில் இருந்தால் மக்களுக்கு நல்லது செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை அப்போது உணர்ந்துள்ளேன். நேரம் வரும் போது அரசியலில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்தேன். அதற்கான காலம் இப்போதுதான் வந்துள்ளது.
தமிழகத்தில் இப்போது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். என்னைப் போன்று பலரும் அதையே நினைக்கிறார்கள்.
கே:- கமல் கட்சியில் சேர்ந்துள்ளீர்களே? அந்த மாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடியும்? என்று எப்படி நம்புகிறீர்கள்?
ப:- மக்கள் பிரச்சினைகளுக்காக டுவிட்டரில் அவர் தெரிவித்த துணிச்சலான கருத்துக்களே கமல் மீது முதலில் ஈர்ப்பை ஏற்படுத்தியது. இன்று மக்கள் மத்தியில் மாற்றம் வேண்டும் என்கிற மனநிலை ஏற்பட்டுள்ளது. எதுவும் நியாயமாக நடக்கவில்லை என்கிற வருத்தம் எல்லோரது மனதிலுமே உள்ளது.
கமல் போன்றவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் நியாயப்படி எல்லாம் நடக்கும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. அதுபோன்ற சூழல்தான் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமையும். அதே நேரத்தில் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டிய கட்டாயமும் இப்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாற்றம் ஒன்றே இதற்கு வழியை ஏற்படுத்தி தரும் என்று விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை கமல் ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்.
கே:- அ.தி.மு.க.-தி.மு.க. ஆகிய 2 ஆட்சி காலத்திலும் நீங்கள் அதிகாரியாக பணியாற்றி உள்ளீர்கள். அப்போதெல்லாம் எதுவும் சரியாக இல்லையா?
ப:- மக்கள் முன்னேற்றத்திற்கான பணிகளும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அடையாளங்களும் அதிக அளவில் இல்லாமலேயே இருந்தன. அதனை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் எண்ணமாக உள்ளது.
ப:- மயிலாப்பூரில் நான் துணை கமிஷனராக பணியாற்றிய போது பல நிகழ்ச்சியில் கமலை சந்தித்துள்ளேன். ஆனால் இருவருக்கும் நெருக்கமான அறிமுகம் ஏற்படவில்லை. புது கட்சி தொடங்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் நண்பர்கள் சிலர் மூலமாக அவரை சந்தித்து பேசினேன். அதன் பின்னரே கமலுடன் இணைந்து மக்கள் பணியில் ஈடுபடுவது என்று முடிவெடுத்தேன்.
கே:- உங்களைப் போல மேலும் பல அதிகாரிகள் கமல் கட்சியில் இருக்கிறார்களா?
ப:- மாற்றத்தை விரும்பும் அதிகாரிகள் பலர் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போது பணியில் உள்ள அதிகாரி ஒருவரும் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேர்ந்துள்ளார். அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் விரும்பும் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவோம்.
இவ்வாறு மவுரியா கூறினார்
