தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து அழகாக இருக்கிறீர்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் திரும்பத் திரும்பக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தலைமையகத்திற்கு வெளியே குழுமியிருந்த செய்தியாளர்கள் நேற்று மாலை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி கேள்வி எழுப்பினர். விடாமல் கேள்வி எழுப்பிய ஒரு பெண் செய்தியாளரைப் பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனவும் நேற்றைவிட அழகாக இருக்கிறீர்கள் என்றும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
இது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
இதையடுத்து, அனைத்து செய்தியாளர்களையும் சகோதர-சகோதரிகளாகவே பார்ப்பதாகவும், அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே பெண் செய்தியாளரை அழகாக இருப்பதாக கூறியதாகவும் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், இந்த சம்பவத்திற்காக தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்
