டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத், அரசியலிலில் இருந்து விலகுவதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிமுக-வில் தினகரன் ஓரங்கட்டப்பட்டு அணிகள் இணைப்புக்கு பின்னர், மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தி தினகரனுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்தவர் நாஞ்சில் சம்பத். இவ்வாறு தினகரனுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்த நாஞ்சில் சம்பத், மதுரை மேலூரில் கடந்த 15-ம் தேதியன்று ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை அறிவித்த போது, அந்த விழாவில் பங்கேற்கவில்லை.

புதிய அமைப்பின் தொடக்க விழாவில் நாஞ்சில் சம்பத் தென்படாமல் இருந்தது பெரிதும் பேசப்பட்டது. ஆனால், குரங்கணி தீ விபத்தில் அவருடைய உறவினர் இறந்து விட்டதால் அவர் வரவில்லை என வெளியில் கூறப்பட்டது. எனினும், அவருக்கும் தினகரனுக்கு கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு இருந்து வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். மேலும், புதிய கட்சியின் பெயரில் தனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்துள்ள அவர், அரசியலில் இருந்து விலகுவதாகவும், எந்த கட்சியிலும் தான் இல்லை எனவும், இனி இலக்கிய மேடைகளில் பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை” என பதிவிட்டுள்ளார்.
270 Views
