ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

காவிரி விவகாரம்: டி.டி.வி.தினகரன் உண்ணாவிரதம் அறிவிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமெனக் கடந்த மாதம் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்துடன் நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இதற்காகத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தினமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகத் தமிழக எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நேற்று (மார்ச் 17) அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாகத் தெரியவில்லை. இதற்காகத் தமிழகத்திலுள்ள ஈபிஎஸ் – ஓபிஎஸ் அரசோ ஓங்கி ஒலித்திடாமல், டெல்டா மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகிப் போவதைக் கண்டுகொள்ளாமல், விவசாயிகளின் வாழ்வு பேராபத்தை நோக்கிச் செல்வதையோ கொஞ்சம்கூட கருத்தில்கொள்ளாமல், காவிரி நீரைப் பெற வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் உணராமல் மத்திய அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்கவில்லை. மேலும் மத்திய அரசுக்கு நல்ல பிள்ளையாக நடந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைய போலித்தனமான முயற்சிகள் எடுப்பதாக நடித்துக் கொண்டுள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘மத்திய அரசுக்கு அழுத்தம் தர முடியாத மக்கள் விரோத மாநில அரசைக் கண்டித்தும், தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தியும், காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் எம்.எல்.ஏ தலைமையில் வரும் 25ஆம் தேதி தஞ்சையில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

232 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன