கேரளாவின் மாநிலப் பழமாக பலாப்பழம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில வேளாண் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் நேற்று (மார்ச் 17) அறிவித்துள்ளார்.
கேரளாவின் மாநில விலங்கு யானை, பறவை கிரேட் கார்ன்பில், மலர் கன்னிகோனா, மரம் தென்னை, மீன் கரிமீன் எனக் கேரள மாநிலம் அறிவித்துள்ளது. ஆனால், பழம் என்று ஒன்று இது வரை அறிவிக்கப்படவில்லை. வரும் 21ஆம் தேதி, முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை கேரள மாநிலப் பழமாக அங்கீகரித்து முறைப்படி அரசாணையை அம்மாநில அரசு வெளியிடுகிறது.

மாநில வேளாண் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் , “கேரளாவில் லட்சக்கணக்கான பலா மரங்களும், பல்வேறு வகையான பலாப் பழங்களும் விளைகின்றன. அதன்மூலம் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்வது மூலம் கேரளாவுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. எனவே, பலாப்பழத்துக்கு மாநிலத்தின் அங்கீகாரத்தை வழங்கி, அதனுடைய உற்பத்தியையும், மதிப்புக்கூட்டு பொருள்களின் விற்பனையையும் உயர்த்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது. பலாப்பழத்துக்கு மாநிலப் பழம் அங்கீகாரம் வழங்குவதன் மூலம் இனி மக்கள் பலாப்பழம் தொடர்பான உணவுப் பொருள்களை அதிகமாகத் தயாரித்து விற்பனை செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பலாப்பழத்தையும் பிரபலப்படுத்தும் நோக்கில் ‘ஜேக் ஃப்ரூட் ஃபெஸ்ட்’ என்னும் பலாப்பழத் திருவிழாவை கேரள அரசு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
