செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

தமிழகத்தில் 4 கட்டங்களாக கூட்டுறவுச் சங்கத் தேர்தல்: தேர்தல் ஆணையர் தகவல்

தமிழகத்தில் 15 அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 18,775 நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலை சிறப்பான முறையில், முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் நடத்த அனைத்துத் துறையினரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் மற்றும் பதிவாளர்கள், துணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
18,775 உறுப்பினர் பதவிகளுக்குத் தேர்தல்:

இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை உள்பட 15 அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 26-ஆம் தேதியும், வேட்பு மனு பரிசீலனை வரும் 27-ஆம் தேதியும், வேட்பு மனுவை திரும்பப் பெறுதல் வரும் 28-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
4 கட்டங்களாக தேர்தல்: வரும் 28-ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறும். 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 7-ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 16-ஆம் தேதியும், நான்காம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதியும் நடைபெறும்.

இந்தத் தேர்தலில் நன்னடத்தை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, எவ்வித புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடக்கூடாது. கூட்டுறவுத் தேர்தலில் பணி புரிபவர்களுக்கு பணி மாறுதலோ, பதவி உயர்வோ அளிக்கக்கூடாது. ஏற்கெனவே பதவியில் இருப்பவர்களுக்கு எந்தச் சலுகைகளும் கிடையாது.

2.17 கோடி வாக்காளர்கள்: இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்பு மனுக்களை www.​coopele​ction.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் கிடையாது. இதில், தமிழகம் முழுவதும் 2.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

முதல் கட்ட தேர்தலில் 1.87 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். குற்ற வழக்குகளில் ஓர் ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றார்.

264 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன