காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்க இன்று சென்னையில் 13 இடங்களில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
மன அழுத்தத்தின் காரணமாக காவலர்கள் தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இந்தநிலையில், காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கவேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனையடுத்து, இன்று சென்னையில் 13 இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த பயிற்சியில் சுமார் 3 ஆயிரம் போலீஸார் பங்கேற்றனர்.

இதில், சென்னைக் காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பங்கேற்ற இந்த யோகா பயிற்சி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது. இதுகுறித்து தெரிவித்த ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘காவல் துறை பணி உடலுக்கும் மனதுக்கும் அழுத்தம் ஏற்படுத்தும் பணியாக உள்ளது. அதனை போக்குவதற்கு யோகா பயிற்சி அவசியமாகிறது. இந்த யோகா பயிற்சி அடுத்த வாரமும் தொடரும்’ என்றார்.
