வியாழக்கிழமை, அக்டோபர் 29
Shadow

லாலு பிரசாத் யாதவிற்கு 7 ஆண்டுகள் சிறை

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4ஆவது வழக்கில் பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1990 முதல் 97 வரை லாலு பிரசாத் யாதவ் பிகார் மாநில முதல்வராக இருந்தபோது மாட்டுத் தீவனம் வழங்குவதில் மிகப் பெரிய ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 3 வழக்குகளில் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 3 வழக்குகளிலும் 5, 3.5, 5 ஆண்டுகள் என மொத்தம் 13.5 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4ஆவது வழக்கான தும்கா கருவூலத்தில் 3.13 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் விசாரணை ராஞ்சி நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கடந்த 19ஆம் தேதி இந்த வழக்கில் லாலு குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிகாரின் மற்றொரு முன்னாள் முதல்வரான ஜெகன்நாத் மிஸ்ரா விடுவிக்கப்பட்டார்.

லாலுவுக்கான தண்டனை விபரம் இன்று (மார்ச் 24) அறிவிக்கப்பட்டது. அதன்படி, லாலுவுக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 30 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது சிறை தண்டனைக் காலம் 20.5 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

தொரந்தா கருவூலத்தில் 139 கோடி முறைகேடு செய்ததாக அவர் மீது தொடரப்பட்ட 5ஆவது வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன