திங்கட்கிழமை, ஜூன் 1
Shadow

கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே 12-ல் தேர்தல்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை!

கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், வரும் மே மாதத்துடன் அம்மாநிலத்தில் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் அங்கு சட்டசபைத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இன்று டெல்லியில் நடந்த தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர், வரும் மே மாதம் 12-ம் தேதி கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடைபெற்று 15-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், `கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும். அதனால் அரசு எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தபட்டு வாக்குப்பதிவு தீவிரமாகக் கண்காணிக்கப்படும். தேர்தல் விதிமுறைகளைக் கண்காணிக்க பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும். மேலும், வாக்குரிமை குறித்து அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொள்ளும். கர்நாடகாவில் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவினம் 28 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் செலவினத்தைக் கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்படும்.

வாக்காளர்களுக்குப் புகைப்படத்துடன்கூடிய வாக்குச் சீட்டு ஒரு வாரத்துக்கு முன்பே தரப்படும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள வி.வி.பி.ஏ.டி (Voter-verified paper audit trail) சீட்டு வழங்கப்படும். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார். தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி தொடங்குகிறது, வேட்பு மனுத்தாக்கல் திரும்பப் பெற ஏப்ரல் 27-ம் தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு மே 12-ம் தேதி நடைபெறும் மற்றும் மே 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தல் நடக்கும் காலங்களில் உச்ச நீதிமன்றம் அறிவித்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தேர்தல் ஆணையம் தலையிடாது. வாரியம் அமைக்க வேண்டும் என்றால் அமைத்துக்கொள்ளலாம் இதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என ஓம் பிரகாஷ் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

242 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன