செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

காவிரி பிரச்னைக்கான முழு அடைப்பு முழு வெற்றி! – ஸ்டாலின் ஹேப்பி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி கைதான திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் முழு அடைப்புப் போராட்டம் நூறு சதவிகிதம் வெற்றியடைந்துள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முதல் கட்டமாக இன்று (ஏப்ரல் 5) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்க ணக்கானோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். மெரினா கடற்கரை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு, புரசைவாக்கத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், “இதற்கு முன்பு தமிழகத்தில் இப்படியொரு முழு அடைப்பு நடந்திருக்குமா என்று கேள்வி எழுப்பும் அளவுக்குப் போராட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுக்குக் கிடைத்துள்ள கணக்கின்படி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுப் பத்து லட்சம் பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. போராட்டத்தால் மக்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை. மக்களே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால் இன்று நடைபெற இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.

“முன்னதாக நடத்தப்பட்ட கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பயணமானது திருச்சி முக்கொம்பில் தொடங்கி கடலூரில் முடிவடைகிறது. நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரிமை மீட்புப் பயணத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

ஆளுநர்-முதல்வர் சந்திப்பு குறித்த கேள்விக்கு, “ஒரு வாரத்திற்கு முன்பு என்னை அழைத்த ஆளுநர், இந்த ஆட்சியில் நடக்கக் கூடிய அலங்கோலங்கள் குறித்து என்னிடத்தில் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த ஆட்சியின் மீது ஆளுநர் எந்த அளவுக்கு மரியாதை வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் ஆளுநரே தனி டிராக்கில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். நம்பிக்கை இருந்திருந்தால் ஆய்வு மேற்கொண்டிருக்க வேண்டிய அவசியமே ஆளுநருக்கு வந்திருக்காது. எப்படி உண்ணாவிரதம் என்ற பெயரில் கபட நாடகத்தை நடத்தினார்களோ அதேபோல்தான் ஆளுநருடான சந்திப்பும் கபட நாடகமே” என்று குறிப்பிட்டார். கைது செய்யப்பட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை காவல் துறையினர் 4 மணியளவில் விடுவித்தனர்.

186 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன