செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

நிசப்தம் அனைவரும் பார்க்கவேண்டிய தரமான சமூக சிந்தனையுள்ள, விழிப்புணர்ச்சி படம்..!

உலகில் எந்த குழந்தைக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்று படம் பார்க்கும் ஒவ்வொரு ஈர மனசும் சொல்லும் விதத்தில் இரு க்கிறது ‘நிசப்தம்’ படம்.
படம் பார்த்த பாதிப்பு விமர்சனம் எழுதவே தோன்றாமல் தடுமாற வைத்திருக்கிறது… அந்தளவுக்கு ஒரு வலியான மனசு பாதிக்கும் நிஜத்தை சினிமாவாக ‘நிசப்தம்’ என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றிருக்கிற எல்லா பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் இது.
படத்தின் பெயர்தான் நிசப்தம்… ஆனால், படம் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சிகளிலும் அதன் வலிமிகுந்த தாக்கம் ஏற்படுத்தும் அதிர்வெடிகள் மனித மனங்களை வெடிவைத்து தகர்க்கும் சத்தம் மனசை தாண்டி கண்களில் வழியாக கண்ணீராக வெளிகாட்டும்.

சரி படம் அப்படி என்னதான் சொல்கிறது…

ஒரு அப்பா, அம்மா, ஒரு பெண் குழந்தை, ஒரு நண்பன் அவன் மனைவி, அவன் பிள்ளை இவர்களை சுற்றியே நடக்கிறது கதை. வீட்டில் ஒரு பகுதியில் கடை நடத்துகிறார் ஹீரோயின். அப்பாவுக்கு கார் கம்பெனியில் வேலை. வீட்டுக்கு நாலு தெரு தள்ளியிரு க்கிற பள்ளியில் படிக்கிறார் மகள்.
அப்பா எப்போதும் ஆபீசை கட்டி அழும் வேலை வீட்டுக்கு வந்தால் கிரிக்கெட் டிவி… அம்மாவுக்கு எப்போதும் கடை பிசினஸ்… ஒரு மழை நாளில் வழக்கம்போல பள்ளி செல்லும் குட்டிப்பெண்ணை ஒரு குடிகார காமுகன் தூக்கிச் சென்று குடிவெறியில் சிதைத்து விடுகிறான். அந்த சூழலிலும் அந்த பெண் போலீசுக்கு போன் செய்கிறார். போலீஸ் வருகிறது ஆஸ்பத்திரி… சிகிச்சையில் சிதைக்கப்பட்ட பகுதிகள் மிக மோசமானதாக இருப்பதால் செயற்கையாக இயற்கை உபாதைக்கு வெளியே பை வைக்கிறார்கள். வாழ்நாள் முழுதும் அந்த பையோடு அந்த சிறுமி வாழவேணடிய சூழல்…

போலீஸ் விசாரிக்கும்போது அந்த காமுகனை அடையாளம் காட்டுகிறார்… சட்ட ஓட்டைகளால் மீண்டும் சிறுமியை கோர்ட்டுக்கு அழைக்கிறது நீதிமன்றம். அங்கேயும் வந்து தைரியமாக குற்றவாளியை அடையாளம் காட்டுகிறார்… ஒரு கொடூரத்தை செய்துவிட்டு எந்த உறுத்தலும் இல்லாமல் இருக்கிற அவனுக்கு சட்டத்தின் ஓட்டைகள் காரணமாக குற்றவாளி தப்பித்தானா… அல்லது தண்டனை பெற்றானா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

நிஜத்தில் கடந்த சில ஆண்டுகளுக்க முன்பு பெங்களூரில் ஒரு பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவத்தின் தாக்கம்தான் படத்தில் இருக்கிறது. ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோராக அஜய், அபிநயா நடித்திருக்கறார்கள் என்பதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதிலும் அபிநயா நிஜத்திலேயே ஒரு மாற்றுத்திறனாளி பேசமுடியாது, கேட்க முடியாது சைகையால் மட்டுமே சூழலை புரிந்து கொண்டு அதற்கேற்றார்போல முகபாவங்களை காட்டி அத்தனை நெகிழ்ச்சியாக நடித்திருக்கறார்.
அஜய் பெண் குழந்தையை பெற்ற அப்பாவின் வலியை மிக யதார்த்தமாக ஒவ்வொரு பிரேமிலும் நிரூபித்திருக்கிறார்.
இவர்களை எல்லாரையும்விட டாப்கிளாஸ் நடிப்பை பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருக்கிற பேபி சாதன்யா கலக்கியிருக்கிறார். புரிந்தும் புரியாததுமான கொடூர சம்பவத்தை உள்வாங்கி அவர் நடித்திருக்கிற ஒவ்வொரு காட்சிகளும் பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

கதை பெங்களூரில் நடப்பதுபோல இருந்தாலும் அங்குள்ள நல்ல போலீஸ் அதிகாரியாக கிஷோர் வழக்கம்போல அவர் பங்குக்கும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
ஷான் ஜாஸில் இசை பல இடங்களில் மடை திறந்த வெள்ளமாக கண்ணீரை வரவழைக்கிறது. மறைந்த நா.முத்துகுமார் எழுதிய பாடல் வரிகளும் வலியை மேலும் அதிகரித்து அவரின் நினைவை கொண்டு வந்து மனசை கனக்கச் செய்கிறது. ஸ்டார் ஒளிப்பதிவில் சினிமாத்தனமே தெரியாமல் நிஜம் மட்டுமே பளிச்சிடுகிறது. மைக்கேல் அருண் எழுதி இயக்கியிருக்கிற ‘நிசப்தம்’ நிச்சயம் பார்ப்பவர்கள் மனசில் கண்ணீர் வெடிகளை சத்தம்போட்டு வெடிக்க வைக்கும்…!

மொத்தத்தில் நிசப்தம் அனைவரும் பார்க்கவேண்டிய தரமான சமூக சித்தனையுள்ள, விழிப்புணர்ச்சி படம்..!

கோடங்கி

609 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன