காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி
கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர் அக்ஷயா
‘கலாப காதலன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆன அக்ஷயா அந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். திறமையான நடிகையாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவில் இருந்தே ஒதுங்கியிருந்தார்.

நல்ல பாடகி, நடிகை என பன்முக திறமையோடு இருந்த அக்ஷயா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘யாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.
தான் இயக்குனர் ஆவதற்கு முன்பு பல தடைகளை தாண்டவேண்டியிருந்தது பல ஏமாற்றங்களையும், துரோகங்களையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வர முடிந்தது என்று கூறிய பெண் இயக்குனர் அக்ஷயா ‘கோடங்கி’ இணையத்தில் தன் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார்…

ஓவர் டூ அக்ஷயா….
நான் நடிகையாக அறிமுகம் ஆனபோது நான் யார் என்றே தெரியாமல் என்னையும் எனது நடிப்புக்கும் உரிய மரியாதை கொடுத்து என்னை உயர்த்தி விட்டது பத்திரிகைகள்தான். அதன்பிறகு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தபோது சினிமாவில் அறிமுகம் ஆன சில நண்பர்களில் ஒருவர்தான் காதல் கந்தாஸ். ஆரம்பத்தில் நல்ல நண்பராக பல ஆலோசனைகள் கொடுத்தார். அது அனைத்தும் என் நன்மைக்காக என்று நான் நினைத்தேன். பின்னால்தான் அவர் சொன்ன அனைத்தும் அவர் நன்மைக்கு என்பது தெரிந்தது.

ஒரு நடன இயக்குனராக அறிமுகம் ஆன காதல் கந்தாசிடம் இப்படி ஒரு கதை என்னிடம் இருக்கிறது அதை படமாக எடுக்கப்போகிறேன் என்றதும் யாருக்கோ இயக்குவதற்கு வாய்ப்பு தருவதற்கு பதில் எனக்கே தரலாமே என்று என்னிடம் கேட்டார். அதன் அடிப்படையில்தான் ‘யாளி’ படத்தை தொடங்கினோம்.
கதை என்னுடையது என்றாலும் அவரது ஆலேசனையின்படி கேமராமேன், மேனேஜர் உட்பட சில முக்கிய நபர்களை படக்குழுவில் இணைத்துக் கொண்டோம்.
ஒரு பெண்ணை ஆரம்பத்தில் அழைத்து வந்து ஏதாவது ஒரு கேரக்டர் கொடுங்கள் என்றார் நானும் சரி என்றேன்.
சென்னையில் இருக்கிறவரை காதல் கந்தாஸ் கேரக்டர் எதுவும் எனக்கு தவறாக தெரியவில்லை. நாங்கள் மலேசியாவுக்கு படப்பிடிபப்புக்கு போனதும் மறுநாளே தன் சுயரூபத்தை காட்டத் தொடங்கிவிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் டாமினேஷன் அதோடு, என் கதையை விட்டு விட்டு ஏதோ வேறு கதையை எடுக்கத் தொடங்கினார். சின்ன ரோலுக்கு என்று அழைத்து வந்த அந்த பெண்ணை இரண்டாவது கதாநாயகி என்று கதையை மாற்ற ஆரம்பித்தார்.
சில நாட்களிலேயே கந்தாசின் நம்பிக்கை துரோகம் வெளியில் தெரிய ஆரம்பித்ததும், எனக்கு தெரிந்து விட்டது என்பதால் மேனேஜர் மூலமாக என்னை மிரட்டும் செயலிலும் இறங்கினார்.
படத்தின் கதை என்னுடையது, அவருக்கு சம்பளம் கொடுத்திருக்கிறேன், படத்தின் தயாரிப்பாளர் என் கணவர், என்னுடனேயே என் அம்மாவும் இருந்தார். இப்படியிருந்தும் நண்பராக வந்த காதல் கந்தாசின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமானதோடு ஒரு கட்டத்தில் படத்தில் இருந்து விலகிவிடுவேன் என்று மிரட்டினார்.
நானும் ரொம்ப நல்லதாக போய்விட்டது தாராளமாக வெளியே சென்று விடுங்கள் நீங்கள் போனாலும் நான் படத்தை எடுத்து முடித்துதான் திரும்புவேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன். என் அம்மாவும், என் கணவரும் எனக்கு ஆறுதலாக தைரியமாக கூட இருந்தார்கள்.
படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே கேமராமேன், மேனேஜர் என சில முக்கியமானவர்களை இனி வேலை செய்யாதீர்கள் என காதல் கந்தாஸ் தடுத்து விட்டார். அவர்களை அவர்தான் அழைத்து வந்தார் என்பதால் அவர்களும் அப்படியே நின்று விட்டார்கள்.
சென்னையாக இருந்தால் பரவாயில்லை. வெளிநாட்டில் ஒரு பெண் இந்த சூழலை எப்படி எதிர் கொள்வது.
அப்போதும் நான் தைரியத்தை இழக்காமல் நள்ளிரவு ஒரு மணிவரை பல மிரட்டல் உருட்டல்களை எதிர் கொண்டு காதல் கந்தாசிடம் இருந்து ‘இனி இந்த படத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனக்கு சேர வேண்டிய சம்பளம் அனைத்தும் பெற்றுக் கொண்டேன்’ என எழுதி வாங்கிக் கொண்டேன்.
பின்னர் மீண்டும் கதையை மெருகேற்றி எனக்கு நம்பிக்கையான டெக்னீஷியன்களை கூட வைத்துக் கொண்டு மிக சிறப்பாக யாளி படத்தை எடுத்து முடித்திருக்கிறேன்.

பிரச்னையை ஏற்படுத்தும்போது இனி இந்த படம் வரவே வராது அவ்வளவுதான் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள் என்று நினைத்துதான் வெளிநாட்டில் பிளாக்மெயிலிங் வேலை எல்லாம் செய்து பார்த்தார் காதல் கந்தாஸ்.
ஆனால், இறைவன் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவள் நான் யாருக்கும் தீங்கு நினைத்தது இல்லை. அதனால், அந்த சூழலிலும் என் குழு எனக்கு நம்பிக்கையாக கூடவே இருந்து படத்தை முடிக்க உதவி செய்தது. அதேபோல என் கணவர், என் அம்மா இருவரும் மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார்கள்.
இனி இந்த படம் தொடர்பாக ஏதாவது சிக்கல் செய்ய நினைத்தால் காதல் கந்தாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கக்கூட நான் தயங்கமாட்டேன். நான் பொறுமையாக இவ்வளவு நாள் இருந்திருக்கிறேன். என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
யாளி படம் இப்போது டப்பிங் பணிகள் முடிந்து கிராபிக்ஸ் பணிகளில் தீவிரமாக உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என்கிறார் நடிகையாக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிற அக்ஷயா.
துறையில் சந்திக்கிற பிரச்னைகளை கண்டும் காணாமல் போவோர் மத்தியில் தனக்கு ஏற்பட்ட பிரச்னையிலும் அதை எதிர்கொண்டு ஒரு படைப்பை உருவாக்கி ரிலீசுக்கு ரெடியாகும் பெண் இயக்குனர் அக்ஷயாவுக்கு ‘கோடங்கி’ இணைய தளம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
