ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) பெல்காம் நகருக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் விஜயபுரா செல்கிறார்.

இன்று மாலை 4.30 மணிக்கு விஜயபுராவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். 2 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பிரசாரத்தை தொடங்கியபோது உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் பிரசாரத்தை பாதியில் முடித்துக் கொண்டதும், அதன்பிறகு வேறு எந்த தேர்தல் பிரசாரத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே விஜயபுரா நகரில் இன்று காலை பிரதமர் மோடி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தனது கடைசி கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். காலை 11 மணிக்கு அவர் இங்கு பேசுகிறார். மேலும் கொப்பல், பெங்களூரு நகரங்களிலும் நடக்கும் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கிறார். நாளை(புதன்கிழமை) பாங்கர்பேட்டை, சிக்மகளூரு, பெலகாவி ஆகிய நகரங்களிலும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசுகிறார்.
268 Views
